டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைதுசெய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரான அவர், டெல்லியிலுள்ள ஆம் ஆத்மி அரசில் கல்வி உட்பட பல முக்கிய துறைகளுக்கு அமைச்சராக இருந்தார். கெஜ்ரிவாலுக்கு வலதுகரமாக இருந்துவந்த அவர், டெல்லியில் பள்ளிக்கல்வியில் பல முன்னேற்றங்களைக் கொண்டுவந்தார். சிபிஐ கைது செய்ததால், துணை முதல்வர் பதவியையும், அமைச்சர் பதவியையும் அவர் ராஜினாமா செய்தார்.

மணீஷ் சிசோடியா

இதே வழக்கில், தெலங்கானா முதல்வரின் மகளும் தெலங்கானா சட்ட மேலவை உறுப்பினருமான கவிதா சிபிஐ-யால் விசாரிக்கப்பட்டு, தற்போது டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அடிக்கடி விசாரணைக்கு அழைக்கப்படுகிறார். ஒவ்வொரு முறையும் அவரிடம் பல மணி நேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்துகிறார்கள். இந்த வழக்கில் அடுத்த குறி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்குத்தான். கலால் கொள்கை முறைகேடு வழக்கின் விசாரணைக்காக சிபிஐ தலைமையகத்தில் ஏப்ரல் 16-ம் தேதி (இன்று காலை) 11 மணிக்கு ஆஜராகுமாறு கெஜ்ரிவாலுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதை டெல்லி முதல்வர் அலுவலகம் உறுதிசெய்திருப்பதுடன், விசாரணைக்கு கெஜ்ரிவால் ஆஜராவார் என்றும் தெரிவித்தார். இந்தத் தகவல் டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கவிதா

கெஜ்ரிவாலுக்கு எதிரான இந்த நடவடிக்கையை ஆம் ஆத்மி கட்சி கண்டித்துள்ளது. கெஜ்ரிவால் ஏன் குறிவைக்கப்பட்டிருக்கிறார் என்பது குறித்து ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி-யான சஞ்சய் சிங் கூறியிருக்கிறார். “தொழிலதிபர் கௌதம் அதானி விவகாரம் குறித்து சமீபத்தில் டெல்லி சட்டமன்றத்தில் கெஜ்ரிவால் பேசினார். மத்திய அரசின் அடுத்த இலக்கு நீங்கள்தான் என்று அப்போதே கெஜ்ரிவாலிடம் நான் கூறினேன். பா.ஜ.க அரசு ஊழலில் ஊறித் திளைக்கிறது. போன்ற நோட்டீஸ்களால் ஊழலுக்கு எதிரான கெஜ்ரிவாலின் போராட்டத்தை முடக்க முடியாது. கெஜ்ரிவாலைக் கைதுசெய்வதற்கான சதிதான் இந்த சம்மன். இந்த சம்மனை வைத்து கெஜ்ரிவாலையோ, ஆம் ஆத்மி கட்சியையோ ஒடுக்கிவிட முடியாது” என்றார் சஞ்சய் சிங்.

கெஜ்ரிவால் கைதுசெய்யப்படுவார் என்று பா.ஜ.க-வினரே வெளிப்படையாகப் பேசிவருகிறார்கள். டெல்லி பா.ஜ.க தலைவரான வீரேந்திர சச்தேவா, “கெஜ்ரிவால் தலைமையிலான அமைச்சரவை கலால் கொள்கைக்கு ஒப்புதல் அளித்ததன் மூலம் இந்த ஊழல் வழக்கில் முதல்வர் கெஜ்ரிவாலுக்கு நேரடித் தொடர்பு இருப்பது தெரிகிறது. கெஜ்ரிவால் கைதுசெய்யப்பட்டு, முன்னாள் அமைச்சர்கள் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் ஆகியோருடன் சிறையில் இருக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை” என்று கூறியிருக்கிறார்.

அர்விந்த் கெஜ்ரிவால்

இன்றைக்கு பா.ஜ.க-வைக் கடுமையாக எதிர்க்கக் கூடிய கட்சிகளில் ஒன்றாக ஆம் ஆத்மி இருக்கிறது. டெல்லியில் காங்கிரஸ் கட்சி செல்வாக்கு இழந்த நிலையில், அங்கு பா.ஜ.க ஆட்சியைப் பிடித்திருக்க வேண்டும். ஆனால், தொடர்ச்சியாக அங்கு இரண்டு முறை சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று முதல்வராக இருக்கிறார் கெஜ்ரிவால்.

அதேபோல பஞ்சாயத்து காங்கிரஸ் கட்சிக்குள் கோஷ்டிப்பூசல் உச்சத்தில் இருந்ததால், கடந்த சட்டமன்றத் தேர்தலில் அங்கு பா.ஜ.க ஆட்சியைப் பிடிக்க முனைப்பு காட்டியது. ஆனால், அங்கு ஆம் ஆத்மி வெற்றிபெற்று பா.ஜ.க-வுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. குஜராத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வுக்கு முக்கியப் போட்டியாளராக ஆம் ஆத்மி கட்சி மாறியது. அதேபோல, இதற்கு முன்பு நடைபெற்ற இமாச்சலப் பிரதேசம், கோவா உட்பட பல மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களில் பா.ஜ.க-வுக்கு எதிராக தீவிரப் பிரசாரம் மேற்கொண்டார் கெஜ்ரிவால்.

அரவிந்த் கெஜ்ரிவால் – ஆம் ஆத்மி

மேலும், பா.ஜ.க-வை எதிர்க்கும் கெஜ்ரிவால் காங்கிரஸ் கட்சியையும் எதிர்த்து வந்தார். இதனால், தேசிய அரசியலில் பா.ஜ.க-வுக்கு எதிரான அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைக்க முடியாத நிலை நீடித்தது. ஆனால், ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்ததற்கு கெஜ்ரிவால் கடும் கண்டனம் தெரிவித்தார். அது, ஆம் ஆத்மியின் அரசியல் நிலைப்பாட்டில் மிகப்பெரிய மாற்றமாகப் பார்க்கப்பட்டது. அதேபோல, ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டதற்கு எதிராக கெஜ்ரால் குரல் கொடுத்தார்.

இந்தச் சூழலில், ஆம் ஆத்மிக்கு தேசியக் கட்சி என்ற அங்கீகாரம் கிடைத்துள்ளது. இது ஆம் ஆத்மி கட்சியின் மிகப்பெரிய வளர்ச்சியையே காட்டுகிறது. இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக கெஜ்ரிவால் மாறிவரும் சூழலில், அவருக்கு எதிராக மத்திய அரசு சதிவலை பின்னுகிறது என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். ஒருவேளை, மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கில் கெஜ்ரிவால் கைதுசெய்யப்பட்டால், அது பா.ஜ.க-வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அணி திரளுவதற்கான வாய்ப்பை மேலும் அதிகரிக்கத்தான் வாய்ப்பு உள்ளது.



Source link