முதுமலை: பாறு கழுகு பாதுகாப்புக்கான இனப்பெருக்க மையங்கள் அமைக்கப்பட வேண்டும், சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
வனப்பகுதி மற்றும் ஊரின் ஒதுக்குப்புறமான இடங்களில் இறந்த விலங்கினங்களின் உடல்களை தின்று, இயற்கை முறையில் சுத்தம் செய்யும் பணிகளை கழுகுகள் மேற்கொண்டு வருகின்றன. ஒரு காலத்தில் காகம், குருவிகளுக்கு இணையாக இருந்த கழுகுகளின் எண்ணிக்கை, பல்வேறு காரணங்களால் குறைந்து வருகிறது.
இதையடுத்து, கழுகுகளை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டில் கழுகு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரினக் காப்பாளர் தலைமையில் 10 பேர் கொண்ட மாநில அளவிலான பாறு கழுகு பாதுகாப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் ஒவ்வோர் ஆண்டும், கழுகுகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால், ஒவ்வொரு மாநிலத்திலும் பல்வேறு காலங்களில் கணக்கெடுப்பு நடந்ததால், அதன் எண்ணிக்கையை சரியாக கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில், 3 மாநிலங்களிலும் முதன்முறையாக ஒருங்கிணைந்த முறையில் கழுகுகள் குறித்த கணக்கெடுப்பு சமீபத்தில் நடைபெற்றது. இதில் 3 மாநிலங்களிலும் சேர்த்து மொத்தம் 246 கழுகுகள் இருப்பது தெரியவந்தது.
இது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மணிகண்டன், பைஜூ ஆகியோர் குறித்து: பாறு கழுகுகள் செழித்தால் பாரும் செழிக்கும். 1990-களில் தென்னிந்தியாவில் பரவலாக காணப்பட்ட கழுகு, தற்போது சில இடங்களில் மட்டுமே உள்ளது. கால்நடைகளுக்கு பயன்படுத்திய வலி மருந்துகளின் வீரியமானது, இறந்த மாட்டை உண்டபோது பாறு கழுகுகளை அடைந்து, அதன் அழிவுக்கு காரணமாக அமைந்தது.
எனவே, இந்த பறவைகளுக்கு தீங்கு விளைவிக்கும் கால்நடை மருந்துகளான டைக்குலோபினாக், அசிக்குலோபினாக், நிமுசிலாய்ட்ஸ், புளூநிக்சின், கீட்டோபுரோபேன் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். மெலாக்சிகம், டால்பினமிக் ஆகிய ஆசிட் மருந்துகள், சித்தா ஆயுர்வேதா, ஓமியோபதி ஆகிய பாதுகாப்பான மருந்து முறைகளையும் பயன்படுத்த வேண்டும்.
இயற்கையாக இறந்த விலங்குகளைப் புதைக்காமலும், எரிக்காமலும் பாறு கழுகுகளுக்கு உணவளிக்க வேண்டும். பாறு கழுகு பாதுகாப்புக்கான இனப்பெருக்க மையங்களை அமைக்க வேண்டும். நீலகிரி உயிர்க்கோள சூழல் மண்டலத்தில் கழுகுகள் பாதுகாப்பு மண்டலம் ஏற்படுத்த வேண்டும்.
அதற்காக கழுகுகள் பயணம் செய்து திரும்பும் போது 100 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 800 இறந்த கால்நடைகளிடம் இருந்து மாதிரிகளை சேகரித்து, அதில் டைக்குலோபினாக் உள்ளிட்ட மருந்துகள் கலக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய வேண்டும். ஹரியாணா மாநிலம் பிஞ்சூரில் நடத்தப் படுவதுபோல 20 முதல் 30 கிலோ மீட்டர் வேகத்தில் சாலை மார்க்கமாக பயணித்தவாறு, கழுகுகள் கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.
அதாவது சிறியூரில் இருந்து வாழைத்தோட்டம், அங்கிருந்து மசினகுடி, மாயாறு, கக்கனல்லா சோதனைச் சாவடி மற்றும் கூடலூர் வரை பயணம் செய்தவாறு கணக்கெடுப்பு நடத்த வேண்டும். இவ்வாறு கணக்கெடுக்கும்போது, நீலகிரி மாவட்டத்தில் வாழும் கழுகுகள் மற்றும் இமாலயன், யுரேசிய நாடுகளிலிருந்து வரும் கழுகுகளையும் அடையாளம் காண முடியும். மேலும், கழுகுகள் கூடு கட்டி வாழும் நீர் மத்தி மரங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.