பொள்ளாச்சி: வால்பாறையில் செயல்படும் தங்கும் விடுதிகள் மற்றும் ரிசார்ட்கள் மே மாத இறுதிக்குள் தமிழ்நாடு சுற்றுலாத் துறையில் தங்களது பெயர்களை பதிவு செய்ய வேண்டும் என சுற்றுலாத் துறை அதிகாரிகள் பதிவு செய்ய வேண்டும்.
வால்பாறையில் சுற்றுலா பயணிகள் தங்கிச் செல்ல வசதியாக, 150-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக வால்பாறை நகர், ரொட்டிக் கடை, சோலையாறு அணை உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் தங்கும் விடுதிகள் கட்டப்பட்டுள்ளன. இதைத் தவிர தனியார் தேயிலை தோட்டப் பகுதிகளில் தனியார் ரிசார்ட்களும் அதிகளவில் உள்ளன.
இதில், வால்பாறையில் அனுமதியின்றி தங்கும் விடுதிகள் செயல்படுவது சுற்றுலாத்துறையின் கணக்கெடுப்பில் தெரிய வந்தது. முறையாக அனுமதி வழங்கும் விதமாக வால்பாறையில் பலமுறை கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்பட்ட பெரும்பாலான தங்கும் விடுதி உரிமையாளர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்யவில்லை எனக்கூறப்படுகிறது.
இது குறித்து மாவட்ட சுற்றுலாத் துறை அலுவலர் சீனிவாசன் கூறுகையில், ”வால்பாறையில் தங்கும் விடுதிகள் நடத்துபவர்கள் சுற்றுலாத் துறையில் முறையாக பதிவு செய்ய வேண்டும். நகராட்சியில் மட்டும் அனுமதி வாங்கினால் போதாது, சுற்றுலாத் துறையிலும் பதிவு செய்ய வேண்டும்.
மே மாத இறுதிக்குள் தங்கும் விடுதி மற்றும் ரிசார்ட் நடத்தி வருபவர்கள் தமிழ்நாடு சுற்றுலாத் துறையில் தங்கள் பெயர்களை பதிவு செய்ய வேண்டும்” என்றார்.