‘யாத்திசை’ உருவான விதம் குறித்து?

“முறையான திட்டமிடல்தான் இந்தக் கதையைக் காட்சி வடிவமாக மாற்றியுள்ளது. படத்தில் வேலை செய்த அனைவரும் புதியவர்கள் என்றாலும் குழுவாக உழைத்தோம். அனைவரும் இது எங்கள் வாழ்க்கைக்கான போராட்டம் என்பதை உணர்ந்து ஓடினோம். அந்த வெறியே படம் சிறப்பாக வந்ததற்குக் காரணம். படத்தின் முன்தயாரிப்புப் பணிக்கு மட்டும் ஒன்றரை ஆண்டுகள் ஆனது. தேனி, கம்பம், தஞ்சாவூர், உடையார்பாளையம் மற்றும் செஞ்சி ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தினோம்.குறிஞ்சி, மருதம், பாலை, முல்லை ஆகிய பகுதிகளை மையப்படுத்திப் படம் பிடித்துள்ளோம்.

புனைவாக இருந்தாலும் வாழ்வியல் கூறுகளை ஆய்வுக்கு உட்படுத்திச் செய்துள்ளோம். உதாரணத்துக்கு அந்த ஆடைகள் கிடையாது. ஆனால் நிர்வாணமாகக் காட்டினால் சென்சார் பிரச்னை வரும். வரலாற்றுச் சான்றுகள்படி அப்போது ஆடைகளுக்குப் பதிலாக நகைகளைப் பயன்படுத்தியதை அறிந்தோம். எனவே நகைகளையே ஆடைகளாக வடிவமைத்தோம். மற்ற படங்கள் போல் வட மாநிலங்களுக்குச் செல்லாமல் இங்கே உள்ள கோயில்களை வைத்து கட்டடங்களை உருவாக்கினோம். உதாரணத்துக்கு இங்கே தூண்கள் வைத்தே கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. வட மாநிலங்களில் இப்படி இருக்காது. இங்கே இருந்த அரண்மனைகளுக்கும் அங்கே இருக்கும் அரண்மனைகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. திரையில் பார்க்கும்போது அந்த மெனக்கெடலின் அனுபவங்களை நிச்சயம் உணர்வீர்கள்.”



Source link