சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் `எண்ணித் துணிக’ என்ற தலைப்பில் நாட்டின் வளர்ச்சியில் பங்கேற்பு அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் மற்றும் சிறப்பாகப் பணியாற்றுபவர்களுக்கு விருது வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.
இதில், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மரக்கன்றுகள் நாடும் திட்டத்தை வெற்றிகரமாக நடத்தி வரும் திருப்பூர் ‘வெற்றி’ அமைப்பின் தலைவர் சிவராம்க்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி விருது வழங்கி பாராட்டுத் தெரிவித்தார்.

இந்த விழாவில், சிவராம் பேசுகையில், “திருப்பூர் என்ற தொழில் நிறுவனங்களால் மாசு அதிகம் உள்ள நகரம் என்ற பெயர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது. அந்த நிலையை தற்போது முற்றிலுமாக மாற்றியுள்ளோம். திருப்பூரில் நாள்தோறும் 13 கோடி லிட்டர் தண்ணீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்தி வருகிறோம். மாவட்டத்தின் மின்தேவை 700 மெகாவாட் இருக்கும்பட்சத்தில் காற்றாலை, சூரியசக்தி மூலம் அதைவிட பலமடங்கு மின்சாரத்தை உற்பத்தி செய்து வருகிறோம். தமிழகத்தில் திருப்பூர் மாவட்டத்தில்தான் காற்றாலை, சூரியசக்தி மூலம் அதிக அளவில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் மறைவை அடுத்து, அவருக்குப் பிடித்த மரக்கன்றுகள் நடும் பணியை வனத்துக்குள் திருப்பூர் என்ற திட்டத்தின் மூலம் முன்னெடுத்தோம். இத்திட்டத்தின் மூலம் திருப்பூர் மாவட்டத்தில் ஆண்டுக்கு 2 லட்சம் மரக்கன்றுகள் நட்டு வளர்த்து வருகிறோம். நாங்கள் வைத்த மரக்கன்றுகளில் இன்று 85 சதவீதம் மரங்களாக வளர்ந்துள்ளன. வெற்றி என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் இந்த ஆண்டுக்கு ரூ.1.50 கோடி செலவிட்டு வருகிறோம். வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டியது திருப்பூருக்கு கிடைத்த பெருமையாகக் கருதுகிறேன்” என்றார்.