வாஷிங்டன்: சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எஃப்) மற்றும் உலக வங்கியின் புதிய கூட்டம் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று வாஷிங்டனில் உள்ள ஐஎம்எஃப் தலைமையகத்தில் நடைபெற்ற நிதிக் குழு கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். அந்தக் கூட்டத்தில் அவர் இந்தியாவின் வளர்ச்சிப் போக்கைப் பற்றியும், சர்வதேச அளவில் உள்ள சவால்கள் குறித்தும் பகிர்ந்து கொண்டார்.

தற்போது உலக அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இந்தச் சூழலிலும் இந்தியாவின் பொருளாதாரம் மேம்பட்ட நிலையில் இருப்பதாக ஐஎம்எஃப் மற்றும் உலக வங்கி குறிப்பிட்டு வந்தன.

இந்நிலையில் இந்தக் கூட்டத்தில் நிர்மலா சீதாராமன் பேசுகையில் “2023-ம் ஆண்டில் இந்தியா வேகமாக வளரும் பொருளாதார நாடாக திகழும் என்று சர்வதேச செலாவணி நிதியமும் உலக வங்கியும் கணித்து உள்ளன. இந்தியாவின் இந்தப் பொருளாதார வளர்ச்சி தொடரும். 2022-23 நிதி ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு தொழில் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட பொருளாதார கொள்கைகளே இந்தியாவின் பொருளாதாரத்தை நல்ல நிலையில் வைத்திருக்கின்றன என்று அவர் குறிப்பிட்டார்.

இந்தியா பங்கேற்பதில் மகிழ்ச்சி: இந்தியாவின் டிஜிட்டல் கட்டமைப்பு குறித்தும் அது இந்தியாவின் வளர்ச்சியில் ஏற் படுத்தி வரும் தாக்கம் குறித்தும் இந்தக் கூட்டத்தில் அவர் பகிர்ந்து கொண்டார். கடன் நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும் நாடுகளுக்கு உலக நாடுகளின் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தைப் பற்றி பேசியஅவர், இந்தியா அதில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைந்ததாக தெரிவித்தார்.

மேலும், உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஜி20 நாடுகள் தொடர்ந்து ஆதரவு வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

Source link