நடிகை நவ்யா நாயர் மலையாளத்தில் பல ஹிட் படங்களில் நடித்து புகழ் பெற்றவர். அதேபோல் தமிழில் ‘அழகிய தீயே’, ‘சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி’, ‘பாசக்கிளிகள்’, ‘மாயகண்ணாடி’, ‘ராமன் தேடிய சீதை’ எனப் பல படங்களில் நடித்துள்ளார். பல மொழிகளில் மிகவும் பிஸியாக நடித்துக்கொண்டிருந்த நவ்யா நாயர், 2010-ம் ஆண்டு சந்தோஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து அதன் பிறகு குறிப்பிட்ட படங்களில் மட்டுமே நடித்து வந்தார்.
குழந்தை பெற்ற பிறகு மொத்தமாக திரையுலகை விட்டு ஒதுங்கி இருந்த இவர் தற்போது ‘ஜானகி ஜானே’ என்ற படத்தின் மூலம் திரையுலகில் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார்.

விரைவில் வெளியாகவுள்ள இந்தப் படத்தின் புரமோஷன் பேட்டி ஒன்றில் பேசிய அவர், “பல ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிப்பதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்ற தயக்கம் இருந்தது. ஆனால் நான் நினைத்ததை விட எனக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது நிறைய கதைகளைக் கேட்டு வருகிறேன். பல இயக்குநர்கள் பல புதிய கோணங்களில் கதைகளைச் சொல்லி அசத்துகின்றனர். எதைத் தேர்வு செய்வது, எதை விடுவது என்றே தெரியவில்லை.
நான் நடித்த போது இருந்த திரையுலகிற்கும் தற்போது பார்க்கும் திரையுலகிற்கும் நிறைய மாற்றங்கள். பல புதிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஒட்டுமொத்த திரைத்துறையிலும் பல அதிசயிக்கத்தக்க மாற்றங்கள் உருவாகியுள்ளன. இப்போது நான் நடிக்கும் படங்களில் நிறைய பெண்கள் வேலை செய்கிறார்கள். இதைப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. முன்பெல்லாம் ஹீரோ, ஹீரோயின்களுக்கு மட்டுமே கேரவேன் வசதி இருக்கும். தற்போது ஷூட்டிங்கில் வேலை செய்யும் பெண்களுக்கு கேரவேன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது உருவாகும் படத்தின் கதை, ஒளிப்பதிவு, படத்தின் உருவாக்கம் மற்றும் அதை விளம்பரப்படுத்தும் முறை என அனைத்து மாற்றங்களும் பிரமிக்க வைக்கின்றன. ஆனால் இந்த செல்ஃபி தொல்லை தான் எல்லை மீறுவதாக உள்ளது. உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனைக்குச் சென்றால் அங்கும் செல்ஃபி எடுக்கின்றனர். ஒருவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த போனால் அங்கும் விடாமல் துரத்தி வந்து செல்ஃபி எடுக்க முயல்கின்றனர். இது போன்ற செயல்கள் அதிக வருத்தத்தை அளிக்கிறது. மற்றவர்கள் நிலையை ரசிகர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அனைவருக்கும் தனிப்பட்ட சுதந்திரத்தை வழங்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.