செய்திப்பிரிவு

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 18 ஏப், 2023 12:19 பிற்பகல்

வெளியிடப்பட்டது: 18 ஏப்ரல் 2023 12:19 பிற்பகல்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 18 ஏப்ரல் 2023 12:19 பிற்பகல்

கோப்புப்படம்

மும்பை: மும்பையில் இந்தியாவின் முதல் பிரம்மாண்ட ஆப்பிள் ஸ்டோரை திறந்து வைத்துள்ளார் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக். பாந்த்ரா குர்லா வளாகத்தில் இந்த ஆப்பிள் ஸ்டோர் அமைந்துள்ளது. இதன் மூலம் ஆப்பிள் நிறுவனம் உலக சந்தையில் அறிமுகம் செய்யும் சாதனங்களை பயனர்கள் உடனடியாக பெறலாம் என தெரிகிறது.

ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தமிழ்நாடு உட்பட சில பகுதிகளில் ஐபோன்களை உற்பத்தி செய்து வருகிறது. இந்தச் சூழலில் இந்தியாவில் பிரத்யேக ஸ்டோரை ஆப்பிள் திறந்துள்ளது. இந்தியாவில் உற்பத்தி மட்டுமல்லாது இங்குள்ள சந்தை வாய்ப்பைப் பயன்படுத்தி விற்பனையை அதிகளவில் மேற்கொள்ளும் வகையில் அந்நிறுவனத்தின் இந்த நகர்வு அமைந்துள்ளது.

இந்தியாவில் பிரத்யேக ஆப்பிள் ஸ்டோர் எப்போது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அந்த பயனர்கள் மத்தியில் இருந்து வந்தது. இந்தச் சூழலில் தற்போது அது நிஜமாகி உள்ளது. இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் அடியெடுத்து வைத்து 25 ஆண்டுகள் ஆகியுள்ளதாக தகவல். அதன் ஒரு பகுதியாக இந்தக் கடை திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் ரீடெயில் விற்பனையில் நேரடியாக ஆப்பிள் இறங்கியுள்ளது.

இதனை நாட்டில் உள்ள ஆப்பிள் நிறுவன எலக்ட்ரானிக் சாதனங்களை பயன்படுத்தி வரும் பயனர்கள் (ஆப்பிள் சாதன பிரியர்கள்) கொண்டாடி வருகின்றனர். இந்த திறப்பு விழாவை முன்னிட்டு ஆப்பிள் ஸ்டோருக்கு முன்பு ஆப்பிள் சாதன பயனர்கள் திரண்டுள்ளதாகவும் தகவல். அதில் ஒருவர் Macintosh SE கணினியை தன் கையுடன் கொண்டு வந்து பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்திருந்தார்.

வரும் வியாழன் அன்று டெல்லியில் ஆப்பிள் நிறுவனம் மற்றொரு ஸ்டோரை இந்தியாவில் திறக்க உள்ளது. இதன் மூலம் உலக அளவில் 25 நாடுகளில் இயங்கி வரும் ஆப்பிள் நிறுவனத்தின் 552 ஸ்டோர்களில் இந்த இரண்டு ஸ்டோர்களும் இடம் பெற்றுள்ளன. மும்பையில் உள்ள ஆப்பிள் ஸ்டோரில் 100 பேர் பணியாற்றுவதாகவும். சுமார் 20 மொழிகளில் இவர்கள் வாடிக்கையாளர்களுடன் பேசுவார்கள் எனவும் தெரிகிறது. டிம் குக், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தவறவிடாதீர்!





Source link