சென்னை ராமாபுரம், அன்னை சத்யா நகர், 4வது தெருவை சேர்ந்தவர் நல்ல சிவம்(30), ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியே சென்று இரவு வீடு திரும்பியபோது வீட்டில் இருந்த ரூ.5,000 பணம் மாயமாகி இருந்தது. இதேபோல் அடுத்தடுத்து 3 முறை இவரது வீட்டில் இருந்து சுமார் ரூ.20 ஆயிரம் வரை பணம் கொள்ளை போனது.

ஆனால் வீட்டின் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்படாமல் அப்படியே இருந்தது. வீட்டில் இருந்து ஆட்கள் வெளியே சென்றதும் நோட்டமிட்டு மர்மநபர் கைவரிசை காட்டி வந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த நல்லசிவம் கைவரிசை காட்டிவரும் கொள்ளையனை பிடித்து விட வேண்டும் என்று எண்ணி இதுபற்றி மனைவியிடம் தெரிவித்தார். இதையடுத்து இருவரும் சேர்ந்து கொள்ளையனை பிடிக்க திட்டமிட்டனர்.

இருவரின் யோசனைப்படி சம்பவத்தன்று நல்லசிவம் வீட்டிற்குள் மறைந்து கொண்டு மனைவி மட்டும் வீட்டின் கதவை பூட்டிவிட்டு வெளியே செல்லுமாறு கூறினார். அதன்படி வழக்கம்போல் நல்லசிவம் மனைவி வீட்டு கதவை பூட்டிவிட்டு எதுவும் தெரியாதது போல வெளியே சென்றார். சிறிது நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் வீட்டின் பூட்டை உடைக்காமல் லாவகமாக கதவை திறந்து உள்ளே சென்றார்.

உங்கள் நகரத்திலிருந்து(சென்னை)

இதையும் படிக்க : 3 பேரை திருமணம் செய்து மோசடி.. நகை, பணத்துடன் எஸ்கேப்.. சிக்கிய கல்யாண ராணி..!

அப்போது வீட்டில் மறைந்து இருந்த நல்லசிவம் கொள்ளையன் வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டிற்குள் ஆள் இருப்பதை கண்ட கொள்ளையன் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றான். தனது வீட்டில் கைவரிசை காட்டிய திருடன் தப்பி விடுவானோ என்ற ஆவேசத்தில் நல்லசிவம் பாய்ந்து சென்று கொள்ளையை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தார். சத்தம் கேட்டு வந்த அக்கம், பக்கத்தினரும் அங்கு திரண்டு தொடர்ந்து கைவரிசை காட்டிய கொள்ளையனுக்கு தர்ம அடி கொடுத்தனர்.

அதன் பிறகுதான் பிடிபட்ட திருடனை கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காரணம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர் வீட்டில் வாடகைக்கு வசிக்கும் மணிகண்டன் என்பது தெரியவந்தது. பின்னர் அந்த நபரை ராமபுரம் போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்து ராமாபுரம் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் பிடிபட்ட கொள்ளையன் பக்கத்து வீட்டில் வசித்து வந்த மணிகண்டன்(26), என்பதும் இளநீர் வியாபாரம் செய்து வந்தவர் உல்லாசமாக செலவு செய்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

மேலும் நல்லசிவம் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றதும் மணிகண்டன் வீட்டின் பூட்டை உடைக்காமல், பூட்டை பிடித்து இழுத்தால் கதவு லாபமாக திறந்து கொள்ளும்படி கதவு இருந்ததால் மணிகண்டனுக்கு வசதியாக போனது. இதனால் வீட்டிலிருந்து உரிமையாளர்கள் சென்றவுடன் லாவகமாக திறந்து கைவரிசை காட்டி வந்து உள்ளார்.

முதலில் வீட்டில் இருந்த பணம் மாயமானதால் நல்லசிவமும் அவரது மனைவியும் ஒருவர் மீது ஒருவர் சந்தேகம் அடைந்தனர். இதன் பின்னர் தொடர்ந்து பணம் மாயமானதால் வெளியில் இருந்து வரும் மர்ம நபர் திருடியது தெரியவந்தது. இதன் பின்னரே கணவன் – மனைவி இருவரும் சேர்ந்து திட்டமிட்டு கொள்ளையனை மடக்கி பிடித்து உள்ளனர். கைதான கொள்ளையன் மணிகண்டன் நல்லசிவம் வீட்டில் 3 முறை கைவரிசை காட்டி பணத்தை சுருட்டியதாக கூறியுள்ளார்.

மேலும் திருடிய பணத்தை வைத்து புதிதாக செல்போன் வாங்கியதும், உல்லாசமாக செலவு செய்ததாகவும் வீட்டிற்குள் நல்லசிவம் மறைந்து இருப்பது தெரியாமல் இருப்பது வழக்கம் போல் மணிகண்டன் உற்சாகமாக சுற்றி வந்தபோது வசமாக சிக்கிக்கொண்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் மணிகண்டனிடம் இருந்து ரூ.5000 பணம், ஒரு செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

செய்தியாளர் : சோமசுந்தரம் (சென்னை)

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:Source link