
பாகிஸ்தானின் தோர்கம் எல்லை நகரில் ஏற்பட்ட நிலச்சரிவில் புதைந்து இருவர் உயிரிழந்தனர். பலத்த இடி, மின்னல், தொடர் மழையால் இந்த நிலச்சரிவு ஏற்பட்டது.

ஊதிய உயர்வு கோரி சுமார் 1,50,000 அரசு ஊழியர்கள் கனடாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 2021-ம் ஆண்டு முதல் 13.5% ஊதிய உயர்வு கேட்டு, பலமுறை கோரிக்கை விடுத்த நிலையில், தற்போது ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளனர்.

பாகிஸ்தானில் தடைசெய்யப்பட்ட தெஹ்ரிக்-இ-தாலிபன் பாகிஸ்தான் (TTP) அமைப்பைச் சேர்ந்த இருவரை பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதி அழுத்தங்கள், கோவிட்-19 காரணமாக, தெற்காசியாவில் அதிக குழந்தை மணப்பெண்கள் இருப்பதாக, யூனிசெஃப் அமைப்பு அறிக்கை வெளியிட்டது.

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவி அக்ஷதாவின் நிதிநிலை குறித்து விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், அவரது பங்குகள் குறித்த முழு விவரங்களை பிரிட்டன் கேபினட் அலுவலகம் வெளியிட்டது.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற இன்ஸ்டாகிராம் மாதலான எம்மா கிளார், அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிறு வயதில் இரண்டு பூனைகளைக் கொன்றதாகப் பதிவிட்டுள்ளார். இந்த நிலையில், இது இணையவாசிகளைக் கடும் கோபத்தில் ஆழ்த்தியிருக்கிறது. பலரும் அவருக்குக் கண்டனம் தெரிவிக்கின்றனர்.

நெட்ஃபிளிக்ஸில் ‘குயின் கிளியோபாட்ரா’ என்ற ஆவணப்படத்தில் கிளியோபாட்ரா ஒரு கறுப்பின ஆப்பிரிக்கராகச் சித்திரிக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தக் கதாபாத்திரத்தில் நடிகை அடீல் ஜேம்ஸ் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வடகொரியத் தலைவர் கிம் ஜாங் உன், வடகொரியா தனது முதல் ராணுவ உளவு செயற்கைக்கோளை உருவாக்கியிருப்பதாக அறிவித்துள்ளார்.

சூடானில் ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்குமிடையில் ஏற்பட்ட தாக்குதலில் பலி எண்ணிக்கை 270-ஐ கடந்துள்ளது.