‘அடுத்து நிகழவிருக்கும் மரணத்தை முன்கூட்டியே தெரிந்துகொள்ளும் கதாநாயகன்’ என்ற ஒன்லைனை, ஒரு கல்யாண வீட்டில் நடக்கும் களேபரங்கள் வழியாக காமெடியாகச் சொல்ல நிறைய இடங்கள் இருந்தும், அப்பாவி ஹீரோ, அண்ணன் – தங்கை பாசம், ஜாலியான அப்பா, சம்பிரதாய கதாநாயகி எனப் பழகிய டெம்ப்ளேட்டை மட்டுமே நம்பி இறங்கியிருக்கிறார் இயக்குநர். இரண்டாம் பாதியில், கல்யாண வீடு, மாமா – மச்சான் என இறங்கி விளையாட நிறைய இடங்கள் இருந்தும், சுமாரான, செயற்கையான காட்சிகளால் அதை வீணடித்திருக்கிறார்.

யூகிக்கும்படியான திருப்பங்களால் திரைக்கதை எழுதப்பட்டிருந்தாலும், மொத்த படத்தையும் தூக்கி நிறுத்துவது விமல் – பால சரவணனின் காமெடி கூட்டணிதான். படம் டல்லடிக்கும்போதெல்லாம், விமல், பால சரவணன், தீபா ஷங்கர், காமெடிக்கு வரும் துணைக் கதாபாத்திரங்கள் என யாரோ ஒருவர் ஒரு காமெடியைப் தூவி சரி செய்துவிடுகிறார்கள். காட்சித் தொகுப்பாகப் பார்த்தால், ஜமீன் வீட்டிலிருந்து பெண் பார்க்க வருவது, மச்சானைப் பாதுகாக்க விமல் செய்யும் சேட்டைகள், வேட்டைக்காரன் உடனான சின்ன சண்டைகள் போன்றவை சிறப்பாக ஒர்க் அவுட் ஆகி, சிரிப்பலையை உருவாக்குகின்றன.