வால்பாறை: வால்பாறை சிறுகுன்ற எஸ்டேட் பகுதியில் வடமாநில தொழிலாளியான சீதாமுனிகுமாரி(22) என்பவர் நேற்று மதியம் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது தேயிலை செடிகளுக்கு இடையில் பதுங்கியிருந்த சிறுத்தை சீதாமுனிகுமாரியின் மீது பாய்ந்து தாக்கியது. இதில் அவரின் வலது கை மற்றும் காலில் காயம் ஏற்பட்டது. அவரது அலறல் சத்தம்கேட்டு அருகில் இருந்தவர்கள் சத்தமிட்டு சிறுத்தையை விரட்டினர்.காயமடைந்த சீதாமுனிகுமாரி வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து தகவலறிந்த வனவர் கணேஷ், சீதாமுனி குமாரிடம் விசாரித்தார். வனத்துறையினர் கூறும்போது,”சம்பவம் நடந்த தேயிலை தோட்டத்தில் சில நாட்களுக்கு முன்பு சிறுத்தை காட்டெருமையை வேட்டையாடியுள்ளது. இறையை சில நாட்கள் வரை மறைவான இடங்களில் வைத்திருந்து உண்பது சிறுத்தையின் வழக்கம்.

சம்பவம் நடந்த தேயிலை தோட்டத்தில் மீதமிருந்த காட்டெருமையின் இறைச்சியை உட்கொள்ளும்போது, ​​அங்கு தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்ட பெண் மீது சிறுத்தை பாய்ந்து தாக்கியுள்ளது. தேயிலைத் தோட்டங்களில் சிறுத்தையால் வேட்டையாடப்பட்ட விலங்குகளின் சடலங்கள் கிடந்தால் அது குறித்து தேயிலை தோட்ட நிர்வாகம் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அப்பகுதியில் தொழிலாளர்களை பணியாற்ற அனுமதிக்ககூடாது என தேயிலை தோட்டநிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.

Source link