வேலூர்: வேலூர் அரசு அருங்காட்சியகம் ரூ.1 கோடி மதிப்பீட்டில் நவீன தொழில்நுட்பங்களுடன் மேம் படுத்தப்படவுள்ளது. நவீன தொழில்நுட்பத்தின் டைனோசரின் சத்தத்தை கேட்கும் வசதி ஏற்படுத்தப்படவுள்ளதால் அதிக பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேலூர் அரசு அருங்காட்சியகம் கடந்த 1985-ம் ஆண்டு செப்டம்பர் 6-ம் தேதி நகர அரங்கில் (டவுன் ஹால்) சிறிய அளவில் தொடங்கப்பட்டது. குறைந்த எண்ணிக்கையிலான கற்சிற்பங்கள் உள்ளிட்டவற்றை தொடங்கப்பட்டு பராமரிக்கப்பட்டது.

ஒரு கட்டத்தில் வேலூர் கோட்டை வளாகத்தில் இருந்த முக்கிய அரசு அலுவலகங்கள் வெளியேறிய நிலையில் நீதிமன்ற வளாகத்தில் செயல்பட்ட கட்டிடம் அரசு அருங்காட்சியகத்துக்கு ஒதுக்கப்பட்டது. அங்கு, 8 பிரிவுகளுடன் கூடிய அரசு அருங்காட்சியகமாக கடந்த 1998-ம் ஆண்டு மாற்றப்பட்டது.

பின்னர், 1999-ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்ட அரசு அருங்காட்சியகமாக செயல்பட தொடங்கியது. மேலும், பார்வையாளர்களை கவரும் வகையில் அரசு அருங்காட்சியகம் முன்பாக டைனோசர் சிலை பெரியளவில் வைக்கப்பட்டுள்ளது. இன்றளவும் வேலூர் அரசு அருங்காட்சியகத்தின் அடையாளமாகவே டைனோசர் சிலை இருந்து வருகிறது.

ஏறக்குறைய 24 ஆண்டுகள் கடந்த நிலையில் வேலூர் அரசு அருங்காட்சியகம் ரூ.1 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்படவுள்ளது. இதற்கான அறிவிப்பு சட்டப்பேரவை மானியக் கோரிக்கை விவாதத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

அதன்படி, வேலூர் அரசு அருங்காட்சியகம் திருவண்ணாமலையில் இருப்பதுபோன்று நவீன விளக்கு வசதிகள், குளு குளு ஏசி வசதியுடன் கூடிய அரங்குகளுடன் முப்பரிமாண காட்சிகள் அடங்கிய கூடம் மற்றும் டைனோசரின் நவீன காட்சியமைப்பு மற்றும் ஊடாடும் தொழில்நுட்ப வசதியுடன் அமைக்கப்படவுள்ளது. இந்த அரங்குக்கு செல்லும்போது டைனோசரின் சத்தத்தை நவீன தொழில்நுட்பத்தில் கேட்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து, அரசு அருங்காட்சியக அதிகாரிகள் கூறுகையில், ”வேலூர் அரசு அருங்காட்சியகத்தில் 1,400 ஆண்டுகள் பழமையான பொருட்களுடன் கூடிய கற்சிற்பக்கூடம், 10 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பொருட்கள் இருக்கும் முன் வரலாற்றுக்கூடம், 1,000 ஆண்டுகள் பழமையான பொருட்கள் அடங்கிய படிமக்கூடம், 200 ஆண்டுகள் பழமையான போர் வாள்கள், பீரங்கிகள் உள்ளன.

நவநாகரிக ஓவியக்கூடம், இயற்கை அறிவியல் கூடம், நாணயவியல் கூடம், மானுடவியல் கூடம், மாவட்ட சுற்றுலாத்தலங்கள் கூடம் என சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழமையான பொருட்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அரசின் புதிய அறிவிப்பால் இந்த அருங்காட்சியகம் நவீன மயமாவதுடன் அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் அரசு அருங்காட்சியகத்துக்கு வருவார்கள்” என்றனர்.

Source link