பெரும்படை கொண்ட பாண்டிய பேரரசைப் பழிவாங்க, எயினர் பழங்குடி குழு களமிறங்கி சமர் செய்வதே `யாத்திசை’ (யாத்திசை).

ஏழாம் நாட்டில், பாண்டிய பேரரசை வெல்ல சேரன் தலைமையில் சோழப் பேரரசும், அதன் கீழ் இயங்கும் வேளிர், எயினர் போன்ற பழங்குடி கூட்டங்களும் ஒன்றுகூடி போர் தொடுக்கின்றன. போரின் இறுதியில், ரணதீரன் பாண்டியன் தலைமையிலான பாண்டியப் பேரரசு வென்று, சோழக் கோட்டையோடு சேர்த்து, மொத்த தென்திசையையும் கைப்பற்றுகிறது. மொத்த எதிரிகளையும் அழிக்கிறது. சோழர்களும் சிலரும் தப்பி காட்டில் ஒளிகிறார்கள். அவர்களில் எயினர் கூட்டமும் ஒன்று. ‘ரணதீரன் பாண்டியனை வென்று, மீண்டும் எயினர்களுக்கு அதிகாரத்தையும் நாட்டையும் கையளிப்பேன்’ எனச் சபதமேற்று, தன் குறும்படையின் துணையுடன் பெரும்போர் படையுடைய ரணதீரனை வெல்ல களமிறங்குகிறான் எயினர் குடியின் இளைஞன் கொதி.

கொதியின் சபதம் நிறைவேறியதா, மக்களுக்கு நாடும் அதிகாரமும் கிடைத்ததா, ரணதீரன் வீழ்த்தப்பட்டானா போன்ற பெருங்கேள்விகளுக்கு, அரசர் கால பிரமாண்டங்கள், துதிபாடல்களற்று, உண்மைக்கு மிக அருகில் ஒரு புனைவுலகத்தைப் படைத்து விடை சொல்லியிருக்கிறார் இயக்குநர் தரணி இராசேந்திரன்.

யாத்திசை

எயினர் இன இளைஞன் கொதியாக சேயோனும், ரணதீரனாக சக்தி மித்ரனும் கச்சிதமான தேர்வு. துடிப்பான பாலை நில இளைஞன், ஆக்ரோஷம் கொண்ட போர் வீரன், இனக் குழுவின் தலைவன் என்ற அடையாளங்களோடு, பாண்டியன் கோட்டையைக் கைபற்றிய இறுமாப்பு, இனத்தைப் பலிகொடுத்த குற்றவுணர்வு என கொதி கதாபாத்திரத்தின் மொத்த பயணத்திற்கும் தன் நடிப்பால் உயிரூட்டுகிறார் சேயோன். ரணதீரன் கதாபாத்திரத்திற்கு முன்கதையில் கொடுக்கப்பட்ட விவரிப்புகளுக்குத் தனது தோற்றத்தாலும், ஆக்ரோஷத்தாலும் நியாயம் செய்திருக்கிறார் சக்தி மித்ரன்.

எயினர் இனக் குழுவின் மூத்தவராக வரும் சந்திரகுமார், சாமியாடியாக வரும் குருசோம சுந்தரம், பெரும்பள்ளி இனக்குழுவின் தலைவியாக சுபத்ரா, தேவரடியாராக வரும் ராஜலெட்சுமி ஆகியோர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணிக்கு நியாயம் வழங்கினர். ஏயினர் இனக் குழு மக்கள், அந்த போர் வீரர்கள், பாண்டிய போர்ப் படையில் உள்ள தளபதிகள், போர் வீரர்கள் என எல்லாருமே புதுமுகங்கள்தான் என்றாலும், எங்கும் அந்நியத்தன்மை இல்லா வண்ணம் நடிப்பை வாங்கிய இயக்குநர்.

சக்ரவர்த்தியின் பின்னணி இசை போரின் பிரம்மாண்டத்தையும் வீரியத்தையும் சிறப்பாகக் கடத்துகிறது. எல்லா பாடல்களும் தனித்துவமாக இருந்தாலும், எதுவும் மனதில் நிற்கவில்லை. அகிலேஷ் காத்தமுத்துவின் ஒளிப்பதிவு வெட்கையான பாலை நிலத்தையும், குருதியோடும் போரையும் சரியாகக் காட்சிப்படுத்துகிறது. முக்கியமாக, டிரோன் ஷாட்டுகள் சிறப்பாகக் கையாளப்பட்டுள்ளன. அரண்மனை மற்றும் ஊரைக் காட்டும் சில கிராபிக்ஸ் காட்சிகள் தவிர்த்து மற்றவை வரைகலையால் சிறப்பாகவே உருவாக்கப்பட்டுள்ளன. சிறிய பட்ஜெட் படம் என்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிந்தாலும் நிறைய இடங்களில் பெரிதாகக் குறையேதுமில்லை.

யாத்திசை

ஓம் சிவபிரகாஷின் சண்டைக் காட்சிகளும், சுரேஷ் குமாரின் ஆடை அலங்காரமும், ரஞ்சித் குமாரின் கலை இயக்கமும், வினோத் சுகுமாரனின் ஒப்பனையும் மற்ற அரசர் காலப் படங்களிலிருந்து `யாத்திசை’யைத் தனித்துவமாக்குகிறது. பாலை நிலத்து இனக்குழுவிற்குக் கல்லால் ஆன ஆயுதமும், பாண்டிய பேரரசிற்கு உலோகத்தால் ஆன ஆயுதமும் கொடுத்தது, ஒரு சோற்றுப்பதம். ஆனால், ஆங்காங்கே வரும் லிப் சின்க் பிரச்னைகள், புதுமுக நடிகர்கள் சிலரின் மேலோட்டமான நடிப்பு போன்றவை களையப்பட்டிருக்க வேண்டிய சிக்கல்கள்.

போரில் பெற்ற தோல்வியால் பாலை நிலத்துக்குத் துரத்தப்பட்டு, நாடற்று வேட்டை சமூகமாகி, விளைவித்து உண்ண வேண்டும் என்ற வேட்கையோடு கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பதாக எயினர் குலம் வாய்ஸ் ஓவரில் சொல்லப்படுகிறது. அவர்கள் வாழும் வீடு, ஆயுதம், உடை, போருக்கு முன்னான சடங்குகள் என எயினர் குலம் நம் கண்முன் கட்டமைக்கப்பட்டாலும், அக்குலத்தின் பெண்களின் பங்களிப்பு என்ன, உறவுமுறைகள், ஊரின் அமைப்பு, நாடு குறித்த வேட்கை உளவியலாக அவர்களைச் செய்தது போன்ற போதிய காட்சிகள் இல்லாததால், எயினர் குலத்தின் குறிக்கோளோடு நாம் எளிதில் ஒன்ற முடியாமல், விலகிப் போனோம். பயணிக்கும்படி ஆகிறது.

அதற்குப் பின், பாண்டிய பேரரசனை அழிக்க எயினரின் 500 பேர் கொண்ட குறுங்குழு ஒன்று கிளம்புவது, அவர்கள் கையாளும் பிரத்யேகமான போர் யுத்திகளும் போர் ஆயுதங்களும் சுவாரஸ்யத்தைக் கூட்டுகின்றன. ஏழாம் நூற்றாண்டு கதைக்களம் என்பதால், அக்காலத்தில் புழங்கிய தமிழ்ச் சொற்களையே கதாபாத்திரங்கள் பேசுகின்றன. இதற்குப் பெரிதும் மெனக்கெட்டிருக்கிறார் வசனகர்த்தா. ஆனால், முதற்படியில், புதிய கதாபாத்திரங்களோடு சப்டைட்டிலையும் படித்து உள்வாங்குவது சற்று கடினமான விஷயம்தான். ஆங்காங்கே வரும் எழுத்துப் பிழைகளும் அதற்கு ஒரு காரணம். அதேநேரம், இரண்டாம் பாதியில் வசனத்தைக் குறைத்தது, காட்சிகளிலும் வேகம் கூட்டி, விட்டதைப் பிடிக்க முயன்றிருக்கிறார்கள்.

யாத்திசை

இடைவேளைக்கு முன்னதான காட்சி தொடங்கி, இறுதிக்காட்சி வரை, போரின் உண்மை முகத்தை, எந்த ஒப்பனையுமின்றி கொடூரமாகக் காட்டிய இயக்குநர். கொற்றவை வழிபாடு, பொருக்கான பலியீடுகள், பேரரசிற்கும் இனக்குழுவிற்குமான உறவு, பேரரசின் படைகளில் சிறிய இனக்குழுக்கள் ஆற்றும் பங்கு, தன்னைத் தானே பலியிட்டுக் கொள்ளும் நவகண்டம் சாங்கியம் என இதுவரை காட்டப்படாத பழங்கால பழக்க வழக்கங்கள் அனைத்தையும் புனைவாக்கி விறுவிறுப்பான இரண்டாம் பாதியில் சேர்த்துள்ளனர்.

ஆட்சி, அரண்மனைகள், படைகள், போர்கள் போன்றவை எல்லாமே, அதிகாரத்தை வெல்ல நடத்தப்படுபவைதான் என்பது கொதி மற்றும் ரணதீரன் கதாபாத்திரங்கள் வழியாகச் சொல்லப்படுகிறது. ஆனால், ‘அதிகாரத்தை மீட்டெடுக்க’ போர் செய்யும் இனக்குழு தலைவர் கொதி, ‘அதிகாரத்தைத் தவிர்க்க’ போரிடும் ரணதீரன் பாண்டியன், இவர்களிடம் யாருடைய பக்கம் நின்று இந்த அதிகாரத்திற்கான போரை அணுக வேண்டும் என்ற குழப்பம் பார்வையாளருக்கு ஏற்படவே செய்கிறது. தேவரடியார் கதாபாத்திரங்களில் எந்தப் புதுமையும் இல்லை என்பதோடு, அவர்கள் கதையிலும் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் வருகிறார்கள்.

யாத்திசை

இறுதிக்காட்சியில், பாண்டிய – சோழ – சேர போரில் நாடு கடத்தப்பட்ட சேர மன்னன் திரும்பப் பாண்டிய தேசம் வருவது, ரணதீரனின் மகன் எயினர் இனக்குழுவின் மூத்தவர் கையில் சிக்குவது, தேவரடியார் எடுத்த இறுதி முடிவு, படைகளை அழிக்கச் செல்லும் பாண்டியப் படை போன்ற முன்னோட்டம், இரண்டாம் பாகத்திற்கான அவலத்தைத் தூண்டுகிறது.

மன்னர் காலக் கதையைச் சரியான அரசியலோடும், புதுமையோடும் சொல்லியிருப்பதால் ஆங்காங்கே தென்படும் தொழில்நுட்ப சிக்கல்களை மறந்து நாமும் `யாத்திசை’ நோக்கி பயணம் செய்யலாம்.Source link