சமீபத்தில் மகாராஷ்டிரா மாநிலத்திலிருக்கும் நவி மும்பையில் ‘மகாராஷ்டிரா பூஷண்’ விருது வழங்கும் விழா நடந்தது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார். லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டார்கள்.

அமித் ஷா

அப்போது வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்தது. இதனால் கூட்டத்தில் அமர்ந்திருந்த பலரும் சுருண்டு விழுந்தனர். இதில் 13 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

முன்னதாக இந்திய வானிலை ஆய்வு மையம், “இந்தக் கோடைக்காலமானது வழக்கத்தைவிட வெப்பம் மிகுந்ததாக இருக்கும். குறிப்பாக வடகிழக்கு, மத்திய, கிழக்கு இந்தியப் பகுதிகள் முழுமையாகவும், வடமேற்கு இந்தியாவின் சில பகுதிகளிலும் வெப்பநிலை இயல்பைவிட அதிகமாக இருக்கும்.

வானிலை ஆய்வு மையம்

தென்தீபகற்ப இந்தியாவைத் தவிர்த்து மற்ற அனைத்துப் பகுதிகளிலும் வெப்பநிலை இயல்பைவிட அதிகரிக்கும். இந்தியா மார்ச் மாதம் முழுவதும் வெப்பநிலை இயல்பைவிட அதிகமாகவே பதிவாகும். மத்திய மற்றும் வடமேற்கு இந்தியாவில் மார்ச் முதல் மே வரை வெப்ப அலை தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம்” எனத் தெரிவித்திருந்தது. இதற்குக் காரணம் என்ன?

இது குறித்து நம்மிடம் பேசிய பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தரராஜன், “இந்தியா ஒரு வெப்ப மண்டல நாடு, பூமத்தியரேகைக்கு அருகில் இருப்பதால், பொதுவாகவே இந்திய துணைக்கண்டம் வெப்பமான வானிலையைக் கொண்டிருக்கும். அதிலும் குறிப்பாக கோடைக்காலமான மார்ச் முதல் மே வரையிலான கடுமையான காலத்தில் வெப்பம் நிலவும்.

சுந்தரராஜன்

இப்படியான நிலையில் புவி வெப்பமாதலால் ஒவ்வோர் ஆண்டும் இயல்பு வெப்பநிலை அதிகரித்துவருவது மிகப்பெரும் சவாலாக மாறியுள்ளது. கடந்த பிப்ரவரியில் அதிகபட்ச வெப்பநிலை 29.54°C ஆகப் பதிவானது. முன்னதாக 2006 பிப்ரவரியில் 29.31°C, 2016 பிப்ரவரியில் 29.48°C வெயில் பதிவானதுதான் அதிகபட்ச சராசரி வெப்பநிலையாக இருந்தது.

கடந்த 1992 முதல் 2015-ம் ஆண்டு வரை இந்தியாவில் 22,562 பேர் வெப்ப அலை தாக்கத்தால் இறந்துள்ளனர். வெப்ப அலை என்பது ஒரு தீவிர வானிலை நிகழ்வு. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

குறிப்பாக, பொதுமக்களுக்கு தேவையான அளவு குடிநீர் வசதி அளிப்பதை உறுதிசெய்தல். பேருந்து பணிமனை / நிறுத்தங்கள், ரயில் நிலையங்கள் போன்ற பொது இடங்களில் நிழற்குடை அமைக்க வேண்டும். வெப்ப அலைத் தாக்கத்தால் பாதிக்கப்படும் நபர்களுக்கு அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்கத் தேவையான வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

வெப்ப அலை

பணியாளர் சட்டங்களின்படி பணிச்சூழலில் தேவையான அளவு தங்குமிடம், பாதுகாப்பான குடிநீர், குளியலறை வசதி போன்றவற்றைப் பணியாளர்களுக்கு அளிக்க தொழிலாளர் நலத்துறை சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

அவசர நிலையை எதிர்கொள்ளும் விதமாக எந்த நேரமும் தேவையான உபகரணங்களுடன் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறையினர் தயாராக இருத்தல் வேண்டும். அங்கன்வாடியிலுள்ள குழந்தைகள் சூரிய ஒளியில் செல்ல வேண்டாம் என அறிவுரை வழங்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.Source link