மனிதன் வாழ்வதற்காக மட்டுமே உழைக்க வேண்டுமே தவிர, உழைப்பதற்காக மட்டும் வாழவில்லை. மனிதனின் அடிப்படையான உரிமைகளில் முக்கியமான ஓய்வு, உறக்கமும். உறக்கம் மட்டுமே மனிதனை, சோர்வு களைந்து மீண்டும் உழைப்பதற்காக சக்தியை அளிக்கிறது. ஆனால் உறக்கத்துக்கு கூட நேரமில்லாமல் அதிக நேரம் உழைத்து களைத்த தொழிலாளிகளின் வரலாறுதான் சமூகத்தில் அதிகம். ஏராளமான தொழிலாளர்கள் 13 மணி நேரம் , 16 மணி நேரம் தன் முழு சக்தியையும், உடலுழைப்பினால் இழந்து இறந்துள்ளனர்.

தொழிலாளிகள் மீதான உழைப்புச் சுரண்டலுக்கு எதிரான மாபெரும் போராட்டம் சோவியத் யூனியனில் நடைபெற்றது. சோவியத் யூனியனில் நடைபெற்ற மாபெரும் போராட்டத்தின் விளைவாக 1917-ம் ஆண்டு நவம்பர் 7-ம் தேதி, லெனின் தலைமையிலான தொழிலாளர் வர்க்க கட்சி ஆட்சியைப் பிடித்தது. சோவியத் யூனியனில் அனைத்து தொழிற்சாலையிலும் 8 மணி நேர வேலை உறுதி செய்யப்பட்டது. ரஷ்யாவில் ஏற்பட்ட புரட்சியின் தாக்கத்தால் உலகெங்கிலும் உள்ள நாடுகளில் 8 மணி நேரம் வேலை, 8 மணி நேரம் உறக்கம், 8 மணி நேரம் தொழிலாளிக்கான நேரம் என்பது நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்தியாவிலும் அம்பேத்கரால் 8 மணி நேரம் வேலை, சட்டத்தின் மூலம் உறுதி செய்யப்பட்டது. நீண்ட நெடிய போராட்ட வரலாறு கொண்ட, இந்த சட்டத்தில் தற்போது தமிழ்நாடு அரசு திருத்தம் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

சட்டசபை

இந்த சட்டத் திருத்தத்தை மத்திய அரசு நிறைவேற்றினாலும், இன்று அனைத்து மாநிலங்களிலும் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை. ஆனால் அதற்கான முயற்சியில் பாஜக தலைமையிலான அரசு ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று (21.4.23) சட்டப்பேரவையில் ஒருநாளைக்கு பன்னிரண்டு மணி நேர வேலை என்ற அடிப்படையில் வாரத்திற்கு 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் விடுமுறை என்ற தொழிலாளர் சட்ட மசோதாவுக்கான அறிவிப்பை திமுக அரசு வெளியிட்டுள்ளது. தொழிற்சாலையின் நெகிழ்வுத்தன்மைக்காக இந்த சட்டம் வரப்பெற்றதாகவும், விரும்பப்படும் தொழிலாளர்களுக்கு மட்டுமே இந்த சட்டம் பொருந்தும் என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ. கணேசன் நியமனம்.

இது தொடர்பாக அசோக் லேலாண்ட் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளி தேன்கண்ணனிடம் பேசினோம். அவர், “தற்போது என்னுடைய வேலை நேரம், காலை 7.30 மணி முதல், மாலை 4 மணி வரை. எங்கள் தொழிற்சாலையில் இயந்திரங்களுடன், தொழிலாளிகளும் உடலுழைப்பும் செலுத்துகிறோம். 8 மணிநேர வேலை முடிந்ததும் உடல் அயர்ச்சியின் காரணமாக எப்போது வீட்டுக்கு போவோம் என்று காத்திருப்போம்.12 மணி நேரமென்றால் எங்கள் உடலும் மனதும் ஒத்துழைப்பது கடினம். தொழிலாளி, அவனுக்காக செலவிடும் நேரமும், குடும்பத்துக்காக செலவிடும் நேரமும் குறையும். குழந்தை பராமரிப்பில்லாமல் தவிக்கும். மனிதனின் சமூக உறவுகள் சிதைக்கப்படும். பகல் நேர வேலை என்றாலே இவ்வளவு மோசமான சூழ்நிலையை தொழிலாளர்கள் அனுபவிக்க நேர்கையில் இரவு நேர வேலை என்றால் தொழிலாளி கூடுதல் சுமைக்குள்ளாவார்கள்”, என்றார்.

தொழிற்சாலை

பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரியும் பெயர் வெளியிட விரும்பாத பெண் ஒருவர், “எங்களுக்கு வேலை நேரம் 9 மணிநேரம், 1 மணி நேரம் இடைவெளி. ஆனால் வேலைச்சுமை அதிகமாக இருப்பதால் 8 மணி நேரத்திற்குள் அனைத்து வேலையும் செய்து முடிக்க முடியாது.

எனவே நான் தினமும் சுமார் 11 மணி நேரம் வேலை செய்கிறேன். வேலை நேரம் 12 மணி நேரமாக அமல்படுத்தப்பட்டால் என்னுடைய வேலைப்பளு கூடுதலாகவே அதிகரிக்கும் என்பதை நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது”, என்றார்.

அனைத்து இந்திய தொழிற்சங்கத்தின் (சிஐடியு) தென்சென்னை மாவட்ட செயலாளர் பா.பாலகிருஷ்ணனிடம் பேசினோம். அவர், “8 மணி நேரம் வேலை நேரம், அதில் உணவுக்காக ஒருமணி நேரம் என்று சட்டம் வலியுறுத்தும்போது தொழிலாளி சட்டத்துக்குப் புறம்பாக 8 மணி நேரத்துக்கு மேல் வேலை செய்ய முடியாது என்று நிறுவனத்திடம் மறுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் இந்த மசோதா சட்டமாக நிறைவேற்றப்பட்டால் தொழிலாளி எந்த காரணத்திற்காகவும் கூடுதல் நேரம் வேலை பார்க்க முடியாது என்று மறுக்க இயலாது.தொழிலாளியின் குடும்பத்துக்கான நேரம், அவனுக்கான நேரம் , தனியார் நிறுவனங்களால் சுரண்டப்படும் . 4 நாளில் 48 மணி நேரமும் வேலை செய்யுங்கள், மூன்று நாள் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்வது ஒரு நாளைக்கு பசிக்கவில்லை என்றாலும் 7 வேளை சாப்பிடுங்கள், மறுநாள் பட்டினியாக இருக்கலாம் என்று சொல்வதற்கு சமம். தொழிலாளர்களின் விருப்பமிருக்கும்பட்சத்தில் மட்டுமே 12 மணி நேரம் வேலை அமல்படுத்தப்படும் என்று அரசு தெரிவித்தாலும் விருப்பம் என்பது எதிர்காலத்தில் கட்டாயமாக்கப்படலாம்.

முதல்வர் மு.க. ஸ்டாலின்

12 மணி நேர வேலைக்கு உடன்படும் தொழிலாளர்களை மட்டுமே வேலைக்கு அமர்த்தும் ஆபத்து உள்ளது. நாட்களின் பொருளாதார பலவீனத்தை எதிர்காலத்தில் 6 மணி நேரம் 12 மணிநேரம் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தொழிலாளர்களுக்கு நிர்பந்திக்கப்படுவர், உடலும் உள்ளமும் சோர்வுற்று உறவுகளுடனும், நண்பர்களுடனும் வெறுப்புணர்வுடன் நடந்துகொள்வார்.

தொழிலாளி வேலைப்பளுவால் குடும்பத்தில் நாட்டம் காட்டுவது குறையும். இதனால் நாட்டின் பிறப்பு விகிதம் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம். 12 மணி நேரம் ஒரு தொழிலாளி இருவருக்கான வேலையைச் சேர்த்து கட்டாயப்படுத்தப்படுவார். எனவே, இன்னொரு தொழிலாளிக்கான வேலை பறிபோகும். வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கும். தொழிலாளிக்கான உடல், மன ஆரோக்கியத்தை கருத்தில் கொள்ளாமல் இந்த சட்டத்தின் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்கள் லாப நோக்கத்திற்காக தொழிலாளியின் உழைப்பை அதிகமாக சுரண்டும். அதற்கு தான் தமிழக அரசு துணை போகிறது?” என்றார்.

நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸிடம் (விடுதலை சிறுத்தைகள் கட்சி) பேசினோம். அவர், “சட்டப்பேரவையில் தற்போதைய தமிழ்நாடு அரசின் அனைத்து அறிவிப்புகளுக்கும் திமுகவின் கூட்டணி கட்சிகள் ஆதரவு அளிக்கும், பாஜக வெளிநடப்பு செய்கிறது. ஆனால் இந்த சட்ட மசோதாவிற்கு கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. ஆனால், பாஜக ஆதரவு தருகிறது. இதிலிருந்தே இந்த மசோதா மக்களுக்கு விரோதமானது என்று நிரூபணமாகிறது. இந்தச் சட்டமானது திமுகவின் கொள்கைக்கு எதிரானது. அண்ணா 6 மணி நேரமாக வேலை நேரத்தை குறைக்க வேண்டும் என்று கூறியவர், அப்படி இருக்கையில் இந்த மசோதாவை திமுக அரசு நிறைவேற்றுவது கடுமையான கண்டனத்திற்குரியது. பல முற்போக்கான செயல்திட்டங்களை கொண்டு வரும் தமிழக அரசு தனியார்மயக் பொருளாதாரக்கொள்கையே வளர்ச்சி என்று நம்புகிறது. இதன் வெளிப்பாடே இந்த சட்ட மசோதா. தமிழ்நாடு அரசின் இந்த நிலைப்பாட்டால் அரசியல் சூழ்நிலையில் கடுமையான பின்னடைவை சந்திக்க நேரும்”, என்றார்.

அளூர் ஷாநவாஸ், வி.சி.க

தொழிலாளர் நலத்திருத்த சட்டம், எந்தந்த தொழிலுக்கு என்ற முழு விவரம் இதுவரை வெளியிடப்படவில்லை. ஆனால் அமைப்புசாரா தொழில் கட்டடத் தொழிலாளிகள், துணிக்கடையில் வேலை செய்பவர்கள், 108 ஆம்புலன்ஸ் சேவையில் பணிபுரியும் தொழிலாளர்கள், வாட்ச்மேன்கள், மெட்ரொ கட்டமைப்பில் பணிபுரியும் தொழிலாளிகள் ஆகியோர் சட்டம், 8 மணி நேரம் வேலையை வலியுறுத்தும் போது பத்து முதல் 12 மணி நேரம் வேலை செய்கின்றனர். அமைப்பு சார்ந்த தொழில்களிலும் வேலைப்பளு அதிகமாக இருப்பதன் காரணமாக ஐடி, மார்க்கெட்டிங் போன்ற தொழில்களில் 8 மணி நேரத்திற்கு மேலாக வேலை செய்ய வேண்டியிருக்கிறது.

12 மணிநேரமாக உயர்த்தினால் தொழிலாளி நிறுவனத்துக்காக மட்டுமே வாழவேண்டி வரும். அவனுக்கான வாழ்க்கையும் ஆரோக்கியமும் பறிபோகும். சாதாரணமாகவே பெண்கள் வீட்டிலும், பணி இடங்களிலும் இரட்டை உழைப்பை செலுத்த வேண்டியிருக்கிறது. இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டால் மூன்று மடங்காக உழைப்பை செலுத்த வேண்டி வரும். ஒட்டுமொத்தத்தில் இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டால் நலிவுற்றவர்களை கொத்தடிமைகளாக்கப்படுவர்.

இதுகுறித்துப் பேசும் தொழிலாளர்கள், ”இப்போதைக்குப் பார்க்கும்போது… ‘அதுதான் மூன்று நாட்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை என்கிறார்களே… பிறகு ஏன் எதிர்க்கவேண்டும்’ என்று தோன்றலாம். கணக்குப் போட்டுப் பார்த்தால்…’நான்கு நாட்களுக்கு 12 மணி நேரம் வீதம் 48 மணி நேரம் வேலை பார்த்தால் போதும். ஆறு நாட்களுக்கு வேலை பார்த்தாலும் (6 X 8) அதே 48 மணி நேரம்தானே வருகிறது’ என்றும்கூட தோன்றும். ஆனால், இப்போதே… தொழிலாளர் நலச் சட்டங்கள் வலுவாகத்தான் உள்ளன. ஆனால், பெரும்பாலான நிறுவனங்களிலும் அமைப்புசாரா நிறுவனங்களிலும் 13 மணி நேரம், 14 மணி நேரம், 16 மணி நேரமெல்லாம் வேலை பார்க்கிறார்கள். இத்தகைய விதி மீறல்களை இன்றைக்கு இருக்கும் தொழிலாளர் நலத்துறையால் தடுக்கமுடியவில்லை. கையூட்டுப் பெற்றுக்கொண்டு தொழிலாளர்களை வதைப்பதற்குத்தான் துணைபோய்க் கொண்டுள்ளனர். இந்த லட்சணத்தில், 12 மணி நேரம் என்பது சட்டபூர்வமாக்கப்பட்டு விட்டால், அதிகாரப்பூர்வமாகவே வாட்டி வதைப்பார்கள். வேலை கிடைத்தால் போதும் என்று வாழ்க்கையை நகர்த்தும் ஏழைகள், வாயில்லா பூச்சிகளாக வதைபடத்தான் செய்வார்கள்” என்று குமுறியவர்கள்,

”தொழிலாளர்கள் தினமான மே 1-ம் தேதி உலகின் பலநாடுகளில் விடுமுறை நாள். இந்தியாவில், சில மாநிலங்களில் மட்டுமே விடுமுறை நாள். தமிழகத்தில் இதற்கான விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது, தி.மு.க ஆட்சியைப் பிடித்த பிறகுதான். எவ்வளவோ போராடும் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மத்தியில் விடுமுறை அளிக்கப்படவில்லை.

வி.பி. சிங்

1990-ல் வி.பி.சிங் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைந்தபோது, ​​தி.மு.க-வும் அதில் இடம்பெற்றிருந்தது. அப்போதுதான் இந்தியா முழுக்க மே 1-ம் தேதி தொழிலாளர் தினத்துக்கு விடுமுறை வழங்கப்பட்டது. பின்னர், பி.ஜே.பி ஆட்சியில் அது திரும்பப் பெறப்பட்டுவிட்டது.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன், ‘சென்னையில் வி.பி.சிங்குக்கு சிலை வைப்போம்’ என்று சட்டமன்றத்தில் முழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின், அதே வி.பி.சிங் போற்றிய தொழிலாளர்களுக்கு அடுத்த சில நாட்களில் உலை வைத்திருக்கிறார்” என்று வேதனை படுகிறார்கள்!

ஆக, ‘ஒன்றியத்தின் தப்பாலே’ மட்டுமல்ல…. ‘திராவிடத்தின் மாப்பாலே’யும் ‘ஒண்ணியும் இல்ல இப்பாலே’ என்கிற கதை சீக்கிரமே அரங்கேறிவிடும் போலிருக்கிறது என்பதுதான் தொழிலாளர்களின் ஒட்டுமொத்தக் கதறலாக இருக்கிறது!



Source link