புதுச்சேரி போலீசில் ரோந்து செல்ல தனி போலீஸ் பிரிவை உருவாக்க வேண்டும்.புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து பிரிவு, அனைத்து மகளிர் காவல் நிலையம் என 3000க்கும் அதிகமான போலீசார் பணியாற்றுகின்றனர். இதுதவிர ஐ.ஆர்.பி.என்., ஊர்காவல்படையினர் 1000க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.

நில பரப்பு மற்றும் மக்கள் தொகை ஆகியவற்றுடன், அருகில் உள்ள விழுப்புரம் மாவட்டத்தை ஒப்பிடுகையில், புதுச்சேரி சிறிய பகுதி; மக்கள் தொகையும் குறைவு. ஆனால், விழுப்புரம் மாவட்ட போலீசை விட 2 மடங்கு போலீசார் புதுச்சேரியில் அதிகமாக உள்ளனர். ஆனாலும், சட்டம் ஒழுங்கு பராமரிப்பில் மிகப்பெரிய தொய்வு உள்ளது.

இதற்கு முக்கிய காரணம் போலீசார் ரோந்து செல்லாததே. ஒரு போலீஸ் நிலையத்தில் 30 போலீசார் இருந்தாலும், கோர்ட் பணி, எழுத்தர் பணி, சென்ட்ரி, மெடிக்கல் விடுமுறை, டிரைவர் என 75 சதவீதம் பேர் சென்று விடுகின்றனர். மீதமுள்ள ஒன்றிரண்டு போலீசார் மட்டுமே ரோந்து செல்கின்றனர்.

ஆள் பற்றாக்குறை காரணமாக, ரோந்து பணியை முழு வீச்சில் மேற்கொள்ள முடியவில்லை. இதனால், ரவுடிகள் கத்தியுடன் சகஜமாக உலா வருகின்றனர். யாரிடம் வெடிகுண்டு உள்ளது என தெரிவதில்லை.

போலீசில் மோட்டார் வாகன பிரிவு, ஆயுதப்படை, ஐ.ஆர்.பி.என்., என பல பிரிவுகள் உள்ளது. அதுபோல் ரோந்து செல்ல தனி பிரிவை உருவாக்க வேண்டும். நோய் வருவதற்கு முன் அறிகுறிகளை வைத்து சிகிச்சை அளிப்பதுபோல், குற்றங்கள் நடப்பதற்கு முன் தடுப்பது தான் சிறந்த வழியாகும்.

அந்த அடிப்படையில் ஐ.ஆர்.பி.என்., ஊர்காவல்படை, ஆயுதப்படை என பல பிரிவுகளில் உள்ள காவலர்களை பயன்படுத்தி ரோந்து செல்ல தனி பிரிவை உருவாக்க வேண்டும். இந்த ரோந்து போலீசார் 24 மணி நேரமும் ஷிப்ட் அடிப்படையில் ரோந்து செல்லும்போது, போலீஸ் நடமாட்டம் இருப்பது தெரிந்து ரவுடிகள் நடமாட்டம் குறையும்.

குற்றம் செய்ய காத்திருக்கும் ரவுடிகளும் போலீசார் கண்காணிப்பதை அறிந்து குற்ற செயல் செய்ய அஞ்சுவர். எனவே, ரோந்து செல்லும் போலீஸ் என தனி பிரிவு துவக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement
Source link