முதல் இன்னிங்ஸில் ஹர்திக் பாண்டியா ஒரு மோசமான இன்னிங்ஸ் விளையாட, அதற்கு அடுத்த இன்னிங்ஸில் ராகுல் அதைவிட ஒரு மோசமான இன்னிங்ஸ் விளையாட என இரண்டு அணியினரும் ஒரு சர்க்கஸை நிகழ்த்தி காட்டினர் நேற்று. என்ன தான் ஸ்லோ பிட்ச்சாக இருந்தாலும் ஒரு நியாயம் தர்மம் வேண்டாமா என்று கேட்கும் அளவுக்கு இருந்தது ஆட்டம்.

ராகுல் – ஹர்திக் பாண்டியா

லக்னோ ஆடுகளம் வரவர சென்னை ஆடுகளத்தின் அடுத்த வெர்ஷனாக மாறி வருகிறது. அதிலும் இரண்டாவது இன்னிங்ஸின் பிற்பகுதியில் எல்லாம் பந்து பிட்ச்சில் பவுன்ஸ் ஆகி பேட்டுக்கு வரவே இரண்டு நாட்கள் ஆகும் என்ற நிலையில் இருந்தது. இப்படிப்பட்ட ஆடுகளத்தில் ஸ்ட்ரைக் ரேட் எல்லாம் ஓவர்ரேட்டட் என்பதை தீர்க்கமாக நம்பும் ராகுல் விளையாடினால் எப்படி இருக்கும்? அப்படி இருந்தது நேற்றைய ஆட்டம்.

டாஸ் வென்ற குஜராத் அணி ஆடுகளத்தை முன்பே நன்கு கணித்தது போல பேட்டிங்கை தேர்வு செய்தது. இரண்டாவது ஓவரிலேயே கில் டக் அவுட் ஆக, கேப்டன் ஹார்திக் களத்திற்குள் வந்தார். சீனியர் விக்கெட் கீப்பர் சஹா ஓரளவு அதிரடியாக ஆடி ரன்கள் எடுக்க முயன்றாலும் ஆடுகளத்தின் தன்மை காரணமாக பவர்பிளே முடிவில் குஜராத் அணி 40 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.‌ தோனியை தனது ஆஸ்தான குருநாதராக ஏற்றுக் கொண்டதோடு மட்டுமில்லாமல் அதை முடிந்த அளவு வெளிக்காட்டிக் கொண்டே இருக்கும் ஹர்திக் பாண்டியா நேற்றைய ஆட்டத்திலும் அதை வெளிக்காட்டினார். விக்கெட்டுகள் விழுந்து சற்று வேகமாகவே தோனி களத்திற்குள் வந்தால் எப்படி விளையாடுவாரோ அப்படி ஒரு ஆட்டத்தை காண்பித்தார் ஹர்திக். நிதானமே பிரதானம் என்று 10 ஓவர்களில் ஒரு விக்கெட் மட்டுமே இழந்து இருந்தாலும் வெறும் 71 ரன்கள் மட்டுமே எடுத்தது குஜராத்.

அதன் பின்பு சஹா, மனோகர், விஜய் சங்கர் என‌ வரிசையாக‌ அவுட் ஆக குஜராத் ரசிகர்கள் ஒரு கட்டத்தில் தூங்க ஆரம்பித்தனர்.‌ இருந்தாலும் என் நண்பன் பாண்டியாவுக்கு நான்தான் உதவுவேன் என்று எதிரணி கேப்டன் ராகுல் முதல் ஆளாக கை கொடுத்தார். இரண்டு ஓவர்கள் வீசி 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்த மிஸ்ராவுக்கு அடுத்த ஓவர் தரவே இல்லை ராகுல்.

அதேசமயம் மூன்று ஓவர்கள் வீசி 30 ரன்கள் கொடுத்த பிஷ்னோய்க்கு‌‌ நான்காவது ஓவர் வழங்கி அழகு பார்த்தார் கேப்டன்‌ ராகுல். அதில் பாண்டியா வெறிகொண்டு இரண்டு சிக்சர்கள் ஒரு பவுண்டரி என அடித்தார்.

கடைசி ஓவரிலும் ஒரு சிக்சரை பாண்டியா அடிக்க 20 ஓவர்களில் 135 ரன்கள் மட்டுமே எடுத்தது குஜராத். அதிகபட்சமாக கேப்டன் பாண்டியா 50 பந்துகளில் 66 ரன்கள் எடுத்தார்.

இந்த லக்னோ மைதானத்தில் ஓரளவு பேட்டிங்கிற்கு சாதகமான நேரம் என்றால் அது பவர்பிளே நேரம் மட்டும் தான். பந்து புதிதாக இருந்து சற்று வேகமாக பேட்டுக்கு வரும் போதே ரன்கள் எடுப்பது தான் சரி. ஆனால் நான் சற்று வித்தியாசமானவன் என்பதை உலகுக்கு உணர்த்த முதல் ஓவரை மெய்டனாக மாற்றினார் கேப்டன்‌ ராகுல். கடந்த போட்டியிலும் முதல் ஓவரை மெய்டனாக ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் ராகுல் அடுத்த ஓவர்களில் உஷாராகி மிகச் சிறப்பாகவே ஆடினார். கூடவே மேயர்ஸும் பவுண்டரிகள் அடிக்க ரன்கள் வேகமாக வந்தன. முதல் ஓவர் மெய்டனான பிறகும் பவர்பிளே முடிவில் 53 ரன்கள் எடுத்திருந்தது லக்னோ.

ஆனால் இதன் பிறகு நடந்த அத்தனை விஷயங்களும் கேவி ஆனந்த் பட ட்விஸ்ட்டுகளில் கூட காண கிடைக்காத அதிசயம். ஏழாவது ஓவரிலேயே ரஷித் கான் பந்துவீச்சில் மேயர்ஸ் அவுட் ஆனார். அதன் பிறகு கூட க்ருணல் பாண்டியா களத்திற்கு வந்து அவ்வப்போது பவுண்டரிகள் அடித்து வந்தார். அப்போதெல்லாம் லக்னோ எத்தனை ஓவர்களில் வெற்றி பெற்றால் முதலிடத்தை பிடிக்கும் என்ற பேச்சுகள் தான் அதிகமாக இருந்தன. ராகுல் மற்றும் க்ரூணால் இணைந்து 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் கூட அமைத்தனர். 15 வது ஓவரில் நூர் அகமத் வீசிய‌ பந்தில் ஆட்டமிழந்தார் க்ரூணால் அதிசயம்‌ என்ன என்றால் அப்போது கூட 30 பந்துகளில் 30 ரன்கள் தேவை என்ற நிலையில் தான் லக்னோ இருந்தது. கைவசம் எட்டு விக்கட்டுகள் இருந்தன.

கே.எல். ராகுல்

அடுத்த இரண்டு ஓவர்களை நூர் அகமத் மற்றும் ஜெயந்த் இணைந்து வீசினர். இரண்டு ஓவர்கள் சேர்ந்தே வெறும் ஆறு ரன்கள் தான் எடுத்தது லக்னோ.

முக்கியமாக அகமது வீசிய ஓவரில் அதிரடி வீரர் பூரன் ஆட்டம் இழந்தார். அப்போது கூட கைவசம் ஏழு விக்கெட்டுகளை வைத்திருந்தது லக்னோ. கடைசி மூன்று ஓவர்களில் ஸ்பின் இல்லை என்ற தைரியத்தில் மிக சாவகாசமாக இருந்தனர். 18 வது ஓவர் மோகித். ஆறு பந்துகளில் ஆறு சிங்கிள்கள். அடுத்த ஓவரிலாவது ரன்கள் எடுப்பார்கள் என்று பார்த்தால் 19ஆவது ஓவரையும் ஷமி மிகச்சிறப்பாக வீசினார். அதிலும் ஐந்து ரன்கள் மட்டுமே வந்தன. அதுவரை தூக்கம் வராத குறையாக இருந்த ஆட்டம் அதன் பின்பு தூங்கிக் கொண்டிருந்த ரசிகர்களை எல்லாம் எழுப்பி பார்க்க வைத்தது.

கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்டன. மோகித் வீசினார். ஆரம்பம்‌ முதல் ஒரு பக்கம் தூண் போல் நின்று கொண்டிருந்த ராகுல் ஓவரில் இரண்டாவது பந்தை தூக்கி அடிக்க நினைத்து அவுட் ஆனார். அடுத்த பந்தை தூக்கி அடிக்க நினைத்து புதிதாக வந்த ஸ்டோனிசும் அவுட் ஆனார்.‌

மோகித் சர்மா

சரி தூக்கி அடிக்காமல் ரன்னாவது ஓடுவோம் என்று நினைத்த பதோனியும் அடுத்த பந்தில் ரன் அவுட் ஆனார். கடைசி இரண்டு பந்துகளில் 9 ரன்கள் தேவை என்றிருந்த போது தொடர் ஆரம்பித்ததில் இருந்து லக்னோ அணியில் சும்மாவே இருக்கும் ஹூடா வந்தார். அவரும் மற்றவர்களை போலவே ஜாலியாக ரன்‌‌ அவுட் ஆக கடைசியில்‌ குஜராத் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

KL Rahul

61 பந்துகளில் 68 ரன்கள் என்ற அரியவகை டி20 ஸ்கோரை அடித்துக் கொடுத்த கேப்டன் ராகுல், இந்த ஆட்டத்தில் என்ன நடந்தது என்பதையே விளங்கிக் கொள்ள முடியவில்லை என்று ஆட்டம் முடிந்த பின்பு பேட்டி கொடுத்தார். ஒவ்வொரு ஆட்டம் முடிந்த பின்பும் எனது ஆட்டத்தில் ஒன்றும் குறைவில்லை என்ற பாணியில் தான் ராகுல் பேசுவார். ஆனால் இந்த முறை நாங்கள் சிறிது அடிக்க முயன்று இருக்க வேண்டும் என்று ஒப்புக்கொண்டார் ராகுல். இனிமேலாவது ஸ்டிரைக் ரேட் ஓவர்ரேட்டட் அல்ல என்பதை புரிந்து கொண்டால் லக்னோ பிழைக்கும்.‌



Source link