புதுடெல்லி: தமிழின் தலைசிறந்த இலக்கண நூல் ‘தொல்காப்பியம்’ என்று அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக துணைவேந்தர் குல்ரெஸ் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் செம்மொழித் தமிழின் பெருமையினைத் தமிழுலகிற்குக் கொண்டு சேர்க்கும் வகையில் கருத்தரங்குகள், பயிலரங்குகளை நிகழ்த்தி வருகிறது. உலகெங்கிலும் செம்மொழித் தமிழின் தனித்துவத்தினைப் பிறமொழிகளைக் கொண்டு சேர்ப்பது இதன் நோக்கம். இந்திய அளவில் சிறந்து விளங்கும் பல்கலைக்கழகங்களோடு இணைந்து கருத்தரங்குகள், பயிலரங்குகளை நடத்தி வருகின்றது. இன்று ஏப்ரல் 25, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மொழிகள் பள்ளி, மொழிக்கல்வி மற்றும் மொழித் தொழில் நுட்பப் புலமும் அலிகர் முஸ்ஸிம் பல்கலைக்கழகமும் இணைந்து இந்த பன்னாட்டு கருத்தரங்கை நடத்துகிறது.

இந்த இணையவழி இருநாள் பன்னாட்டுக் கருத்தரங்கை அலிகர் முஸ்லிம் பல்கலைகழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் முகம்மது குல்ரெஸ் இன்று தொடங்கி வைத்தார். அப்போது அவர், “தொல்காப்பியம் தமிழின் தலைசிறந்த இலக்கணநூல். தமிழ் மொழிக்கும், வட இந்திய மொழிக்கும் உள்ள நீண்ட காலத் தொடர்பை, அண்மையில் உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற காசித் தமிழ்ச் சங்கம் உறுதிப்படுத்தியது, பண்பாடு, கலாச்சாரத்தின் அடிப்படையில் இரண்டும் ஒன்றோடொன்று தொடர்புடையதாக விளங்குகிறது” எனத் தெரிவித்தார்.

சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற இலங்கையின் ஜெஃப்னா பல்கலைக்கழக மத்திப்புறு பேராசிரியர் அ.சண்முகதாஸ் பேசுகையில், “தொல்காப்பியத்தின் தொன்மை, எழுத்து, சொல், பொருள் என்ற மூன்று பொருண்மைகளின் நுட்பங்களைத் தொல்காப்பிய நூல்களின் வாயிலாக விளக்கிகளோடு பேசினார். நடைபெற தம் வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்தார்.

வாழ்த்துரை வழங்கிய செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குநரான பேராசிரியர் இரா.சந்திரசேகரன், “செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் செயல்பாடுகள் நிறுவனத்தின் நோக்கத்தை மையமாக வைத்து நடைபெறுகிறது. அந்நோக்கத்தைச் சென்றடையும் வகையில், தமிழில் மட்டுமல்லாது பிறமொழிகளிலும் தொல்காப்பியம், திருக்குறள் ஆகிய நூல்களின் மொழிபெயர்ப்புப் பணிகள் நடைபெறுகின்றன” என்று தெரிவித்தார்.

அலிகர் முஸ்ஸிம் பல்கலைக்கழக மவுலானா அப்துல்கலாம் ஆசாத் நூலகத்தின் தலைமை நூலகர் பேராசிரியர் நிஷாத் பாத்திமா, “செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வெளியிட்டுள்ள தொல்காப்பிய இந்தி மொழிபெயர்ப்பு நூல் அலிகர் முஸ்ஸிம் பல்கலைக்கழக நூலகத்தில் இடம்பெற்றுள்ள சுட்டிகாட்டி” என்று பாராட்டினார். வரலாற்றுத்துறைப் பேராசிரியர் எஸ்.சாந்தினிபி, “தொல்காப்பியம் ஒரு இலக்கண நூல் மட்டுமல்ல, தொல்காப்பியம் சமூகம், வரலாறு, பண்பாடு ஆகியவற்றை வெளிப்படுத்தும் இலக்கணக் களஞ்சியம். இதன் சிறப்பினைப் பிறமொழியாளர்களும் உணர்ந்துகொள்ளும் வகையில் தொல்காப்பியத்தை மையமாகக் கொண்டு இக்கருத்தரங்கு நடைபெறுகிறது” எனக் குறிப்பிட்டார்.

இவ்விழாவில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து, இலங்கை, ஜெர்மனி, மலேசியா, தான்சானியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் கருத்தரங்கில் இணையவழியில் கலந்துகொண்டனர். முன்னதாக இப்பன்னாட்டு கருத்தரங்கு, அலிகர் முஸ்லிம் பல்கலைகழகத்தின் பாரம்பரியத்தின்படி, புனிதக் குர்ஆன் ஒரு வாசகங்களின் வாசிப்புடன் தொடங்கியது. அதேசமயம், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் வழக்கப்படி தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.

தொடர்ந்து, நாளையும் பல்வேறு தலைப்புகளில் ஐந்து அமர்வுகள் நடைபெற உள்ளன. இந்த அமர்வுகள் தொல்காப்பியத்தின் வழி தமிழரின் வாழ்வியல், கலை, வரலாறு, பண்பாடு, நாகரிகம், தமிழுக்கேயுரிய தனித்துவமான இலக்கியக் கோட்பாடுகள் அகம் – புறம், இலக்கியக்கோட்பாடு எனும் தலைப்புகளில் நடைபெற உள்ளன.

Source link