தூத்துக்குடி அருகே முறப்பநாட்டில் கிராம நிர்வாக அலுவலகத்தில் புகுந்து விஏஓ சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். மணல் கொள்ளையை தடுக்க முயன்றவர் கொல்லப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள முறப்பநாடு கிராம நிர்வாக அதிகாரியாக 56 வயதான லூர்து பிரான்சிஸ் என்பவர் பணிபுரிந்து வந்தார்.இவர் தாமிரபரணி ஆற்றோரங்களில் மணல் கடத்தல் அதிகமாக நடந்து வந்த புகாரையடுத்து இரவு நேரங்களில் ரோந்து செல்ல ஆரம்பித்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த பகுதியில் ரோந்து செல்லும்போது தாமிரபரணி ஆற்றில் இருந்து ராமசுப்பு என்பவர் இருசக்கர வாகனத்தில் ஆற்று மணலை கடத்திச் சென்றார்.

அப்போது கிராம நிர்வாக அதிகாரியை பார்த்தவுடன் மணல் மூட்டைகளை அப்படியே போட்டுவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்று விட்டார்.இது குறித்து விஏஓ லூர்து பிரான்சிஸ் முறப்பநாடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.

உங்கள் நகரத்திலிருந்து(தூத்துக்குடி)

தூத்துக்குடி

தூத்துக்குடி

இந்நிலையில் செவ்வாய்கிழமை கிராம நிர்வாக அலுவலகத்தில் லூர்து பிரான்சிஸ் பணியாற்றிக் கொண்டிருந்த போது 2 பேர் அரிவாளுடன் அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்தனர். என் மீது எப்படி காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம் என்று ஆக்ரோஷத்துடன் அரிவாளுடன் பாய்ந்த அவர்கள், பிரான்சிஸ் மீது சரமாரியாக வெட்டித் தாக்குதல் நடத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். பட்டபகலில் நடைபெற்ற இந்த படுகொலைச் சம்பவத்தைப் பார்த்ததும் அலுவலகத்தில் இருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த கிராம நிர்வாக அதிகாரியை சம்பவ இடத்திற்கு வந்த முறப்பநாடு போலீசார் நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி பிரான்சிஸ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து முறப்பநாடு போலீசார் ஒருவரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: தூத்துக்குடியில் கொல்லப்பட்ட விஏஓ குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

நேர்மையான கிராமநிர்வாக அதிகாரி என பெயர் எடுத்த லூர்து பிரான்சிஸ் ஏற்கனவே சமூக விரோத கும்பல்களால் பலமுறை தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார். சில வருடங்களுக்கு முன் தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூரில் அகழ்வாராய்ச்சி பணிகளுக்காக வருவாய்த்துறை மூலமாக நிலங்கள் கையகப்படுத்தப்படும் பணிகள் நடைபெற்றன.

இந்தப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு அரசு நிலங்களை முறையாக அளவிட்டு கையகப்படுத்தும் பணிகளில் விஏஓ லூர்து பிரான்சிஸ் திறம்பட செயல்பட்டார்.அப்போது அருங்காட்சியகம் அமைப்பதற்கு குறிப்பிட்ட சில ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டு அரசிடம் ஒப்படைத்தார். இதனால் ஆத்திரமடைந்த ஆக்கிரமிப்பாளர்கள் நிலத்தை கையகப்படுத்திய பிரான்சிஸை மிரட்டி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இவ்வாறு நேர்மையாகவும், தைரியமாகவும் மிரட்டல்களுக்கு அஞ்சாமல் தனது பணிகளை செய்து வந்த லூர்து பிரான்சிஸ் தற்போது மணல் கடத்தல் குண்டர்களால் கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மணல் கொள்ளையர்கள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும், அரசு அலுவலர்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மணல் கொள்ளையைத் தடுக்க நேர்மையுடன் போராடிய விஏஓ பட்டப்பகலில் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் தூத்துக்குடி பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link