அஹமதாபாத்: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 55 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றிபெற்றுள்ளது.

208 ரன்கள் என்ற பெரிய இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு துவக்கம் சரியாக அமையவில்லை. 2வது ஓவரிலேயே 2 ரன்களுக்கு நடையைக் கட்டினார் மும்பை கேப்டன் ரோகித் சர்மா. ஸ்லோ இன்னிங்சை வெளிப்படுத்திய இஷான் கிஷனும் 13 ரன்களுக்கு விக்கெட்டாக, இம்பேக்ட் பிளேயராக களமிறக்கப்பட்ட திலக் வர்மா, எந்த இம்பேக்ட்டும் காட்டாமல் 2 ரன்களில் வீழ்ந்தார்.

கேமரூன் கிரீன் 3 சிக்சர்களுடன் 33 ரன்கள் எடுத்து அவுட் ஆக, மும்பை அணி 11 ஓவர்கள் முடிவதற்குள்ளாகவே 59 ரன்களுக்கு 5 விக்கெட்டை இழந்து தடுமாறியது. சூர்யகுமார் யாதவ் 23, டிம் டேவிட் 0 என மும்பையின் டாப் ஆர்டர்கள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த தவறினர், நேஹால் வதேரா அதிரடியாக விளையாடி 40 ரன்கள் சேர்த்து வெளியேறினார்.

அவரின் ஆட்டமிழப்புக்கு பின் சச்சின் மகன் அர்ஜுன் பேட்டிங் இறங்க வாய்ப்பு கிடைத்தது. அர்ஜுன் 9 பந்துகளில் 13 ரன்கள் சேர்த்து கடைசி ஓவரில் விக்கெட்டானார். இறுதியில் மும்பை அணி 9 விக்கெட்களை இழந்து 152 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி கண்டது. இதன்மூலம் குஜராத் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

குஜராத் தரப்பில் ஆப்கன் வீரர்களான நூர் அகமது மற்றும் ரஷீத் கான் இணைந்து மாயாஜால சூழலால் மும்பையின் டாப் ஆர்டரை காலி செய்தனர். அதிகபட்சமாக நூர் அகமது 3 விக்கெட்டும், ரஷீத் கான் மற்றும் மோஹித் சர்மா தலா இரண்டு விக்கெட்டும் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு கைகொடுத்தனர்.

குஜராத் டைட்டன்ஸ் இன்னிங்ஸ்: டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. குஜராத் தொடக்க ஆட்டக்காரரான விருத்திமான் சாஹா தொடக்கத்திலேயே 4 ரன்களுடன் கிளம்பினார். சுப்மன் கில் விளாச அவருக்கு ஹர்திக் பாண்டியா துணை நின்றார். ஹர்திக் பாண்ட்யாவை பியூஷ் சாவ்லா வெளியேற்ற, தமிழக வீரர் விஜய் சங்கர் களத்துக்கு வந்து சேர்ந்தார்.

34 பந்துகளில் 56 ரன்களைச் சேர்த்த சுப்மன் கில் அவுட்டாக அடுத்த ஓவரில் விஜய் சங்கரும் 19 ரன்களில் பெவிலியன் திரும்பினார். 13 ஓவர்களில் 4 விக்கெட்டை இழந்த குஜராத் 103 ரன்களைச் சேர்த்திருந்தது. அடுத்து பாட்னர்ஷிப் அமைத்த அபினவ் மனோகர், டேவிட் மில்லர் மும்பை பந்துகளை வானத்தை நோக்கி பறக்கவிட்டனர். 3 சிக்சர்களை விளாசிய அபினவ் மனோகர் 42 ரன்களில் விக்கெட்டானார்.

சிறப்பாக ஆடிய டேவிட் மில்லர் 46 ரன்களைச் சேர்த்துவிட்டு கிளம்ப, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த குஜராத் அணி 207 ரன்களை குவித்தது. ராகுல் தெவாட்டியா 20 ரன்களுடனும், ரஷித் கான் 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

மும்பை அணி தரப்பில் பியூஸ் சாவ்லா 2 விக்கெட்டுகளையும், அர்ஜுன் டெண்டுல்கர், குமார் கார்த்திகேயா, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், ரிலே மெரிடித் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுளை வீழ்த்தினர்.

Source link