முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடும், கடற்கரை ஓரத் தலமும் ஆனது திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள், திருவிழா மற்றும் விசேஷ விரத நாட்களில் பக்தர்களும் இங்கு சுவாமி தரிசனம் பெற்றுச் செல்கின்றனர்.

தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் நாளுக்கு நாள் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தக் கோயிலில் கடந்த 2009-ஆம் ஆண்டு ஜூலை 2-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. கடந்த 2 ஆண்டுக்கு முன்பே மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த அரசால் திட்டமிடப்பட்டது.

பாலாலய பந்தக்கால் நட்ட நிகழ்வு

ஆனால், பரவலால் கும்பாபிஷேகப் பணிகள் நடைபெறவில்லை. இந்த நிலையில், இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தனியார் நிறுவனத்தின் பங்களிப்புடன் ரூ.200 கோடி மதிப்பீட்டில் பெருந்திட்ட வளாகப் பணிகள் மற்றும் மகா திருப்பணிகள் நடத்தி கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான முதல்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கடந்த பிப்ரவரி 17-ம் தேதி மகா கும்பாபிஷேகத்திற்காக கிழக்கு கோபுரம் மற்றும் சாலக் கோபுரம் (சண்முக விலாச மண்டப நுழைவு வாயில்) பகுதியில் திருப்பணிக்காக பாலாலயம் செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று ராஜகோபுரத்தின் கீழ் பகுதியில் பாலாலயம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் அமைச்சர்கள் சேகர் பாபு, அனிதா ராதாகிருஷ்ணன், திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பந்தல்கால் நாட்டினர்.

தொடர்ந்து சரவணப் பொய்கையில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் யானை தெய்வானைக்காகக் குளியல் தொட்டி கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. 21×12 மீட்டர் சுற்றளவும், 5½ அடி ஆழமும் கொண்டது இந்தக் குளியல் தொட்டி. இதில் சவர் பாத் வசதியும் அமைக்கப்பட்டுள்ளது.

குளியல் தொட்டிக்குள் அழைத்து வரப்பட்ட தெய்வானை

இதை இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில், மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார். குளியல் தொட்டிக்குள் சென்றதும் யானை தெய்வானை உற்சாகக் குளியல் போட்டது. மகிழ்ச்சியில் அங்குமிங்குமாக நடந்து சென்றது. துதிக்கையைத் தூக்கிப் பாகன்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தது. தண்ணீருக்குள் நின்றவாறே துதிக்கையைத் தூக்கி அங்கு திறந்து நின்றவர்களுக்கு ஆசீர்வாதம் செய்தது. 25 வயதான இந்தப் பெண் யானை தெய்வானையைத் தலைமை பாகன் ராதா கிருஷ்ணன், உதவி பாகன்கள் உதய சங்கர், செந்தில் ஆகியோர் பராமரித்து வருகின்றனர்.

தலைமை பாகன் ராதா கிருஷ்ணனிடம் பேசினோம், “திருக்கோயில் அன்னதான மண்டபத்தின் அருகில் யானை கட்டிப் போடும் இடம் உள்ளது. இங்குதான் தெய்வானையைக் குளிப்பாட்டுவோம். தெய்வானையை நிற்க வைத்து, அமர வைத்தும் குழாய் மூலம் பைப் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து குளிப்பாட்டிப் பிறகு அலங்காரம் செய்வோம். தினமும் காலையிலும், மாலையிலும் திருக்கோயில் பிராகாரத்தை தெய்வானை சுற்றி வருவது வழக்கம். முக்கிய விசேஷ நாட்கள், விரத நாட்கள் மற்றும் திருவிழா நாட்களில் ரத வீதிகளைச் சுற்றி வருவது வழக்கம். பல ஊர்களில் கோயில் யானையை தினந்தோறும் அருகில் உள்ள ஆறுகளுக்கு அழைத்துச் சென்று குளிப்பாட்டுகிறார்கள்.

சவர் பாதத்தில் குளிக்கும் தெய்வானை

சில ஊர்களில் வாரத்தில் 3 முதல் 4 நாட்கள் வரை ஆறுகளுக்கு அழைத்துச் செல்கிறார்கள். திருச்செந்தூரைப் பொறுத்தவரை கடல் மட்டுமே உள்ளது. ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றுக்கு அழைத்துச் செல்வது சாத்தியமில்லாதது. இந்த நிலையில் இவ்வளவு பெரிய குளியல் தொட்டி தெய்வானைக்காக கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது நல்ல விஷயம். தண்ணீரைப் பார்த்ததும் ஆறுதான் என நினைத்த தெய்வானை, உற்சாகக் குளியல் போட்டது.

தெய்வானை இவ்வளவு மகிழ்ச்சியாக விளையாடி நாங்கள் பார்த்ததில்லை. சவரில் குளிக்க வைத்தது மழையில் நனைந்தது போல மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது. இனி தெய்வானைக்கு தினமும் குளியல் தொட்டியில்தான் குளியல்” என்றார் மகிழ்ச்சி பொங்க. தெய்வானையின் உற்சாகக் குளியலை பக்தர்கள் பார்த்து ரசித்தனர்.



Source link