நாகப்பட்டினம்: வேம்பு சார்ந்த பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவது சுற்றுச்சூழலைப் பாதுகாக்க உதவுகிறது என விவசாயிகளுக்கு வேளாண்மை துணை இயக்குநர் தேவேந்திரன் ஆலோசனை வழங்கினார்.
நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பில், விவசாயிகளுக்கு குறுவை சாகுபடி பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. ஆத்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் மகேஸ்வரி வரவேற்றார்.
வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்(பொறுப்பு) கலைச்செல்வன் தலைமை வகித்தார். வேளாண் துணை இயக்குநர்(ஆட்சியரின் நேர்முக உதவியாளர்) தேவேந்திரன், விதைச்சான்று அலுவலர் பிரியங்கா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், தேவேந்திரன் பேசியதாவது: நடப்பாண்டில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பருவமழை இயல்பைவிட அதிகளவு பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேட்டூர் அணையில் நீர் அதிகளவில் இருப்பதால் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, விவசாயிகள் முன்கூட்டியே அதிக பரப்பளவில் குறுவை சாகுபடி செய்து அதிகமகசூல் மற்றும் வருமானம் பெற வேண்டும். தற்போது, கோடை மழை பெய்து வருவதால் கோடை உழவு செய்ய வேண்டும். இதனால் மண் இலகுவாக மாறும். புற்கள் மற்றும் கோரைக் கிழங்குகள் கருகிவிடும். பூச்சிகளும் வெகுவாகக் கட்டுப்படுத்தப்படும்.
நிலம் தயாரிப்பில் நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். வரப்பில் உளுந்து, துவரை, காராமணி, வெண்டை, மஞ்சள், சூரியகாந்தி, ஏள், சென்டிப் பூ உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டு, நன்மை செய்யும் பூச்சிகளை அதிகரிக்கச் செய்ய வேண்டும். ஏக்கருக்கு 20 பறவைக் குடில்களை அமைத்து, தீமை செய்யும் பூச்சிகளை அழிக்க வேண்டும்.
இரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளை தவிர்த்து, வேம்பு சார்ந்த பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்துவது, சுற்றுச்சூழலை பாதுகாக்க உதவுகிறது. இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில், விவசாயிகள், ஆத்மா திட்ட அலுவலர்கள், வேளாண்மை உதவி அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். துணை வேளாண்மை அலுவலர் தெய்வகுமார் நன்றி கூறினார்.