சென்னை: கடந்த ஆண்டு இந்தியாவில் சுமார் 3,500-க்கும் மேற்பட்ட கடன் செயலிகளை (லோன் ஆப்) பிலே ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது கூகுள். இந்த செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரில் விதிகளை மீறிய காரணத்திற்காக நீக்கப்பட்டுள்ளது. கடந்த 2021-ல் நிதி சேவை சார்ந்த செயலிகளுக்கான கொள்கைகளை இந்தியாவில் அறிமுகம் செய்தது. எப்போதும் இந்த கொள்கைகளை அப்டேட் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளது கூகுள்.

மொபைல் போன் செயலி மூலம் பயனர்களுக்கு கடன் வழங்கும் செயலிகள் கடந்த 2021 முதல் ரிசர்வ் வங்கியிடம் உரிமம் பெற வேண்டும். அதே போல அந்த உரிமத்தின் நகலை சமர்பிக்க வேண்டும் என்பது கூகுளின் விதி. அப்படி இல்லை என்றால் உரிமம் பெற்ற கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு ஒரு தளமாக மட்டுமே தங்கள் செயலி இருப்பதாக உறுதியளிக்க வேண்டும். இது மாதிரியான கொள்கையை உலகம் முழுவதும் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது கூகுள்.

ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை கொண்ட போன்களை பயன்படுத்தி வரும் பயனர்கள் தங்கள் போன்களில் செயலிகளை டவுன்லோட் செய்ய பெரும்பாலும் பயன்படுத்துவது கூகுள் பிளே ஸ்டோரை தான். இந்த தளம் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு நம்பகத்தன்மை மிக்கதாக வருகிறது.

அதன் காரணமாக பயனர்களின் பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்கும் செயலிகளை அடையாளம் கண்டு பிலே ஸ்டோரிலிருந்து நீக்கும் பணியை கூகுள் நிறுவனம் மேற்கொள்ளும். கடந்த காலங்களில் இது போன்ற நடவடிக்கையை கூகுள் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. அதோடு பயனர் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் கொள்கை வகுத்து கடைப்பிடித்து வருகிறது கூகுள். அந்த வகையில்தான் கடந்த ஆண்டு மட்டும் 3,500-க்கும் மேற்பட்ட கடன் செயலிகள் நீக்கப்பட்டுள்ளன.

Source link