அவைத் தலைவர் என்ற முறையில் துரைசாமி பொதுக்குழு கூட்டினால் மதிமுகவினர் யாரும் செல்ல மாட்டோம் என்று திருப்பூர் ம.தி.மு.க மாவட்டச் செயலாளர் ஆர்.நாகராஜ் தெரிவித்துள்ளார்.

ம.தி.மு.க அவைத்தலைவர் துரைசாமி அக்கட்சியின் தலைவர் வைகோவிற்கு எழுதிய கடிதத்தில், ‘மதிமுகவை திமுகவுடன் இணைத்து விடுங்கள் என தெரிவித்திருந்தார். இதனால் மதிமுகவில் உட்கட்சி பூசல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் துரைசாமி திருப்பூரில் உள்ள தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதில் வைகோ தனக்கு பதில் அளிக்க வேண்டும். இல்லைஎனில் 2-ம் தேதி செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக தெரிவித்தார்.

இந்நிலையில் மதிமுகவில் பிளவு இல்லை என திருப்பூர் மதிமுக மாவட்டச் செயலாளர் நாகராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘மதிமுகவினர் அனைவரும் வைகோ தலைமையில் அவருக்கு பின்னால் இருக்கிறோம் .பொதுச் செயலாளர் வைகோவை பயன்படுத்திக் கொண்டு தற்போது குறை கூறுகிறார் . திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட முதலில் எதிர்ப்பு தெரிவித்தவர் அவைத்தலைவர் துரைசாமி தான். தற்போது திமுகவில் இணைக்க அறிவுறுத்துகிறார்.

மதிமுகவில் போலி உறுப்பினர் எண்ணிக்கை என குறிப்பிடுவது தவறானது. இது போன்று கட்சியை அவமரியாதை செய்வது வருத்தமளிக்கிறது. அவரது வார்டிலேயே மதிமுகவிற்கு எத்தனை உறுப்பினர் உள்ளனர் என அவருக்கு தெரியாது. அவைத் தலைவர் துரைசாமிக்கு யாரும் இல்லை.

அவைத் தலைவர் என்ற முறையில் துரைசாமி பொதுக்குழு கூட்டினால் மதிமுகவினர் யாரும் செல்ல மாட்டோம். இது தொடர்பாக காலையில் வைகோவுடன் தொலைபேசியில் பேசினேன். வைகோ பொறுமையாக இருக்க அறிவுறுத்தினர்.

துரை வைகோ வருகைக்குப் பின்பு திருப்பூர் மாவட்டத்தில் 28 அமைப்பு 48 அமைப்பானது. தொண்டர்கள் விருப்பப்பட்டு துரை வைகோவை அரசியலுக்கு அழைத்து வந்துள்ளோம்.

செய்தியாளர் சந்திப்புக்கு பின்பு ம.தி.மு.க தொழிற்சங்க சொத்துக்களை அபகரிக்கும் அவைத்தலைவர் துரைசாமி ஒழிக என கோஷம் எழுப்பினர்.

செய்தியாளர்: பாலாஜி பாஸ்கர், திருப்பூர்.



Source link