கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், இந்த சில தினங்களில் கத்தரி வெயிலும் தொடங்கப் போகிறது. வெயிலில் இருந்து தப்பிக்க, உடல் சூட்டை தணிக்க நுங்கு, தர்பூசணி, இளநீர், பழரசங்களை நாடி பருகி வருகிறோம். இதில் எளிதாகவும் ஆண்டு முழுவதும் கிடைப்பதுமான இளநீர், நல்ல பல பயன்களைக் கொண்டுள்ளது.

உடல் சூட்டைக் குறைப்பதில் முக்கியப் பங்காற்றுவது இளநீர், பல தாதுச்சத்துகளையும் ஊட்டச்சத்துக்களையும் கொண்டிருப்பதாக மருத்துவம் கூறுகிறது. இளநீர், கொழுப்பைக் கரைத்து உடல் பருமனைக் குறைக்கும் என்கிறார் இயற்கை மற்றும் யோகா மருத்துவர் ஜெ.எம்.ஜெனிபர் டயானா. இளநீரின் பயன்கள் குறித்து அவர் கூறினார்…

கொழுப்பு

“நமக்குத் தேவையான பல சத்துகளைத் தன்னுள்ளே கொண்டிருப்பது இளநீர். குறைந்த அளவு, வெறும் 46 (சுமார்) கலோரிகளைக் கொண்டது. இதனடிப்படையில் உடல் பருமனைக் குறைக்க இளநீரைவிட சிறந்தது வேறு எதுவுமில்லை. நல்ல கொழுப்பை அதிகரித்து (HDL) கெட்டக் கொழுப்பைக் (LDL) குறைக்க உதவும்; உடலின் வளர்சிதை மாற்றத்தின் அளவை (வளர்சிதை மாற்ற விகிதம்) அதிகரிக்கும், இதனால் தைராய்டு சுரப்பிகூட நன்றாக வேலை செய்யத் தொடங்கும்.

தாய்ப்பாலைப் போல சுத்தமான இளநீர்

நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்; இன்சுலின் சுரப்பை மேம்படுத்தும். இரண்டாம் உலகப் போரின்போது காயம்பட்டவர்களுக்கு சலைனுக்குப் பதில் இளநீர் செலுத்தினார்கள் என்பது வரலாறு. அந்தளவுக்கு அற்புதமான இளநீர், தாய்ப்பாலைப்போல மிகவும் சுத்தமானது.

பதப்படுத்தப்பட்ட குளிர்பானங்களில் நார்ச்சத்து கிடையாது. ஆனால், ஒரு டம்ளர் இளநீரில் சுமார் மூன்று கிராம் நார்ச்சத்து இருக்கிறது. இந்த நார்ச்சத்து, உணவு சட்டென்று குடலில் உறிஞ்சப்படுவதைத் தவிர்த்து, உணவு மிக மெதுவாகச் செரிமானமாகி உறிஞ்ச உதவும்.

மென்மையான தேங்காய்

எனவே, குறைந்த இடைவெளியில் பசி ஏற்படுவதையும் தவிர்க்கும். வயிற்றில் உப்புசத்தை ஏற்படுத்தாமல், வயிற்றை நிரப்புவதில் இளநீருக்கு நிகர் ஏதுமில்லை.

மிக முக்கியமான கனிமச் சத்துக்களில் ஒன்று பொட்டாசியம். அது இளநீரில் அதிகமிருக்கிறது. சாப்பிடும் உணவைச் சக்தியாக மாற்றும் திறன் கொண்டது. இளநீரில் சுமார் இரண்டு கிராம் புரதம் உள்ளது. இது, பசியைக் கட்டுப்படுத்தும் தன்மை உடையது” என்கிறார் ஜெ.எம்.ஜெனிபர் டயானா.

கொழுப்புச்சத்து இல்லாத இளநீர்

இளநீரின் சத்துக்கள் குறித்து, ஊட்டச்சத்து நிபுணர் வாணியிடம் பேசினோம். “கொழுப்புச்சத்தே இல்லாதது இளநீர்” என்று ஆரம்பித்தவர், அதிலுள்ள சத்துக்கள் சிறப்புகளை விளக்கினார்…

“இளநீரில் சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின்கள் பி, சி, துத்தநாகம் போன்ற சத்துக்கள் உள்ளன. பகலில் பழச்சாறுகள் குடிப்பவர்கள், அதற்கு பதிலாக தினமும் இளநீர் குடிப்பது நல்லது.

சரும வறட்சி

பழச்சாறுகளில்கூட வெள்ளைச் சர்க்கரை அதிகம் சேர்க்கப்பட்டு, பழத்தின் முழுச்சத்துகளும் கிடைக்காமல் போகலாம். இளநீரில் அது போன்ற எந்தப் பிரச்னையும் இல்லை.

இளநீர் குடிப்பது, உடலில் வறட்சி, சருமப் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க உதவும். மலச்சிக்கல், உயர் ரத்த அழுத்தப் பிரச்னைகளைச் சரிசெய்ய உதவும். இளநீரின் வழுக்கைப் பகுதியை ஒதுக்கிவிடக் கூடாது. தினமும் இளநீர் குடிப்பதால் சிறுநீரகக்கல், கீல்வாதம், அழற்சி போன்றவற்றிலிருந்து தப்பிக்கலாம். கர்ப்பிணிகள் இளநீர் குடித்தால் ஃபோலேட் (Folate) சத்து கிடைக்கும்.

உடல் எடையை குறைக்க உதவும்

உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள், முதலில் தங்கள் உணவில் உள்ள கலோரிகள் அனைத்தையும் ஒதுக்கத் தொடங்குவார்கள். அரிசி வகை உணவுகளைத் தவிர்ப்பார்கள்; சர்க்கரையை ஒதுக்குவார்கள்; ஜூஸ் குடிப்பார்கள். உண்மையில் 117 கலோரிகள் இருக்கும் ஜூஸை குடிப்பதற்குப் பதிலாக, சுமார் 46 கலோரிகள் வரையிருக்கும் இளநீரை தினமும் குடிப்பது, கொழுப்புச்சத்து ஏற்படாமல் உடலைக் காக்கும்.

இளநீரில் கிடைக்கும் சத்துகளில் முக்கியமானது, நார்ச்சத்து. இளநீரில் 2.6 கிராம் வரை நார்ச்சத்து உள்ளது. `ஒருவர் அதிகளவு நார்ச்சத்து எடுத்துக்கொண்டால், அவருடைய உடல் எடை குறையத் தொடங்கும்’ என்பது ஆய்வு ஒன்றின் முடிவு. உணவில் இருந்து கொழுப்புச்சத்தைத் தவிர்க்க விரும்புபவர்கள் இளநீரை மட்டும் அருந்தலாம்.

உடல் எடை | மாதிரிப்படம்

உடற்பயிற்சி செய்பவர்கள், தங்களது பயிற்சியை முடித்ததும், ஆற்றல் கிடைக்க குளிர்பானங்களைக் குடிப்பார்கள். சில குளிர்பானங்கள் வாந்தி, வயிற்றுப்போக்கு பிரச்னைகளை ஏற்படுத்தும். ஆனால், இந்தப் பிரச்னையை எந்தப் பக்கவிளைவுகளும் இல்லாமல் சரிசெய்யக்கூடிய அருமருந்து, இளநீர்.

ஊட்டச்சத்து நிறைந்த இளநீரால் பல்வேறு நன்மைகள் இருந்தாலும், சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். இது சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் சத்து அதிகம் கொண்டது. எனவே, சர்க்கரை நோயாளிகள் மருத்துவ ஆலோசனைக்குப் பிறகே இளநீர் அருந்த வேண்டும்” என்றார்.

இளநீரால் இவ்வளவு நன்மைகளா?

* உடல் எடை குறையும்,

*உடல் வறட்சி ஏற்படாது,

* சரும பாதிப்பு ஏற்படாது,

* சிறுநீரகக்கல் ஏற்படாது,

* கீல்வாதம் பிரச்னையில் இருந்து விடுபடலாம்

இளநீர்

* நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்,

* இன்சுலின் சுரப்பு மேம்படும்,

* செரிமானப் பிரச்னை ஏற்படாது.

*மலச்சிக்கல் ஏற்படாது,

* உயர் ரத்த அழுத்தப் பிரச்னையைச் சரிசெய்ய உதவும்,



Source link