புதுச்சேரி: புஷ்கரணி விழா இன்று மாலை ஆரத்தியுடன் நிறைவடைந்தது. சங்கராபரணி ஆற்றில் புனித நீராட பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
புதுவை திருக்காஞ்சி கெங்கைவராக நதீஸ்வரர் கோவிலையொட்டி உள்ள சங்கராபரணி ஆற்றில் புஷ்கரணி விழா கடந்த மாதம் 22ம் தேதி தொடங்கியது.புஷ்கரணி விழாவையொட்டி கோவிலில் நாள்தோறும் யாகம், மதியம் தீர்த்தவாரி, மாலையில் கங்கா ஆரத்தியும் இந்நாட்களில் நடந்தது. 12 ராசிக்குரிய நட்சத்திரத்தை சேர்ந்தவர்கள் குறிப்பிட்ட நாளில் வந்து தீர்த்தமாடி, கெங்கைவராக நதீஸ்வரரை வழிபட்டு கங்கா ஆரத்தியை தரிசனம் செய்தனர். ஆரம்பத்தில் பக்தர்களின் வருகை குறைவாக இருந்தது. நாட்கள் செல்ல செல்ல பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் சங்கராபரணி ஆற்றில் நீராட பக்தர்கள் குவிந்தனர்.
கோடை விடுமுறை, தொடர் விடுமுறை காரணமாக சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில் சங்கராபரணி ஆற்றில் நீராடும்போது பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. இன்று புஷ்கரணி நிறைவு நாள் என்பதால் பக்தர்கள் அதிகளவில் வந்து தரிசித்தனர். புஷ்பகரணியில் அனைத்து ராசி நட்சத்திரங்களையும் சேர்ந்தோரும் நீராடினர். கோவிலில் 108 கலச அபிஷேகம் நடந்தது. மதியம் தீர்த்தவாரியும் நடந்தது. மாலை கங்கா ஆரத்தியுடன் விழா நிறைவு பெற்றது. இந்நிகழ்வில் பேரவைத்தலைவர் செல்வம், அமைச்சர் தேனீ ஜெயக்குமார், டிஜிபி மனோஜ்குமார் லால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து மாலையில் மங்கள இசையும், வானவேடிக்கையும், இரவு கலைநிகழ்வுகளும் நடந்தன.