தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும், தி.மு.க-வின் தலைவருமான கருணாநிதி இருக்கும்போதே, தி.மு.க-விலிருந்து பிரிந்து ம.தி.மு.க என்ற புதிய கட்சியைத் தொடங்கி தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலையை உருவாக்கியவர் வைகோ. ஆனால், தற்போது வைகோ தொடர் தேர்தல் இழப்புகள் காரணமாக, ஆளும் தி.மு.க கூட்டணிக் கட்சிகளில் ஒருவராக அங்கம் வகிக்கிறார்.

வைகோ – திருப்பூர் துரைசாமி

இந்த நிலையில் ம.தி.மு.க அவைத்தலைவர் சு.துரைசாமி, “30 ஆண்டு காலமாக உங்கள் உணர்ச்சிமயமான பேச்சை நம்பி வாழ்க்கையை இழந்த தொண்டர்களை இனியும் ஏமாற்றாதீர்கள். ம.தி.மு.க-வுக்கு எதிர்காலம் இல்லை. தாய்க் கழகமான தி.மு.க-வுடன் இணைப்பதே நல்லது” என வைகோவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்த விவகாரம் அரசியல் வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாகவே, இது குறித்து விகடன் வலைதளப் பக்கத்தில் வாசகர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

விகடன் கருத்துக்கணிப்பு

அதில், `ம.தி.மு.க-வுக்கு எதிர்காலம் இல்லை. தி.மு.க-வுடன் இணைத்துவிடுவதே நல்லது என ம.தி.மு.க அவைத்தலைவர் சு.துரைசாமி பேசியிருப்பது…’ எனக் கேள்வி கேட்டு, `அதிருப்தியின் வெளிப்பாடு, சரியான கருத்து, கருத்து இல்லை’ என்ற மூன்று விருப்பங்களும் தரப்பட்டிருந்தன.

விகடன் கருத்துக்கணிப்பு

இந்த நிலையில், கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி அதிகபட்சமாக 72 சதவீதம் பேர் `சு.துரைசாமி பேசியிருப்பது சரியான கருத்து’ எனத் தெரிவித்திருக்கிறார்கள். அதற்கடுத்தபடி, `25 சதவிகிதம் பேர் அதிருப்தியின் வெளிப்பாடு’ என்றும், `3 சதவிகிதம் பேர் கருத்து இல்லை’ என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.Source link