மும்பை: தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் ராஜினாமா நிராகரிக்கப்படுவதாகவும், அவரே தொடர்ந்து கட்சியை வழிநடத்த வேண்டும் என்றும் கட்சியின் குழு ஒருமனதாக முடிவு செய்துள்ளது.

தேசியவாத காங்கிரஸ் தலைவரான சரத் பவார், தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக கடந்த செவ்வாய்கிழமை அறிவித்தார். இதை ஏற்க மறுத்து கட்சித் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யக்கூடாது என சரத் பவாரை அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கட்சியின் குழு இன்று கூடி ஆலோசனை மேற்கொண்டது. இதில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் ராஜினாமா நிராகரிக்கப்படுவதாகவும், அவர் தொடர்ந்து கட்சியை வழிநடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதனைத் தெரிவித்த கட்சியின் தேசிய துணைத் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பிரபுல் படேல், “தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் பதவியில் இருந்து விலகுவது என்று சரத் பவாரின் முடிவை கட்சிக் குழு நிராகரித்துள்ளது. அவரே தொடர்ந்து கட்சியை வழிநடத்த வேண்டும். பதவியில் தொடர வேண்டும் என்று குழு தனது விருப்பத்தை தெரிவித்துள்ளது” என கூறினார்.

தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் சகன் புஜ்பால், “சரத் பவார் தனது ராஜினாமாவை திரும்பப் பெற வேண்டும். மக்களின் விருப்பத்துக்கு அவர் மதிப்பளிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார். மற்றொரு மூத்த தலைவரான ஜெயந்த் பாடில், “கட்சியின் தேசிய தலைவராக சரத் பவார் தொடர வேண்டும் என்ற தீர்மானத்தை ஒருவரும் எதிர்க்கவில்லை. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள கட்சி நிர்வாகிகளும், மாற்றுக் கட்சித் தலைவர்களும் சரத் பவார் தனது பதவியை ராஜினாமா செய்வதற்கு இது சரியான தருணம் அல்ல.

கட்சியின் இந்தத் தீர்மானத்தை பிரபுல் படேலும், பி.சி. சாக்கோவும் சரத் பவாரை நேரில் சந்தித்து அளிப்பார்கள். இது எங்கள் கட்சியில் எடுக்கப்பட்ட மிக முக்கிய முடிவு. சரத் ​​பவாரின் அறிவிப்பால் லட்சக்கணக்கான தொண்டர்கள் நிம்மதி இழந்தனர். இந்த தீர்மானத்தை சரத் பவார் ஏற்பார் என்ற நம்பிக்கை உள்ளது. இதற்கும் மகா விகாஸ் கூட்டணிக்கும் தொடர்பு இல்லை. அது எப்போதும்போல இருக்கும்” என தெரிவித்துள்ளார்.

Source link