நடக்கப் போகும் சம்பவங்களை முன்பே கண்டுபிடிக்கும் `தீர்க்கதரிசி’ என்கிற முகம் தெரியாதவரின் குரலுக்கும், அக்குரலால் அலைக்கழிக்கப்படும் சென்னை காவல்துறைக்கும் `ஒளிந்து பிடித்து’ விளையாட்டுதான் இந்தத் திரைப்படம்.

சென்னைக் காவல்துறையின் கட்டுப்பாட்டு அறைக்கும், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கும் ஒரு மர்ம நபரிடம் இருந்து அழைப்பு வருகிறது. அடுத்து நடக்கப் போகும் ஒருவரின் மரணத்தைச் சொல்லி, அதை உடனே தடுக்கக் கோருகிறது. ஆனால், காவல்துறையின் அஜாக்கிரதையால் அம்மரணம் நிகழ்ந்துவிடுகிறது. அதைத் தொடர்ந்து, அடிக்கடி கட்டுப்பாட்டு அறைக்கும், தனியார் தொலைக்காட்சிக்கும் போன் செய்யும் அந்தக் குரல், அடுத்து நடக்கவிருக்கும் கொலை, கொள்ளை, விபத்து போன்றவற்றைப் பட்டியலிட்ட, காவல்துறையை அலையவிடுகிறது.

தீர்க்கதரிசி விமர்சனம்

மக்களால் ‘தீர்க்கதரிசி’ என அழைக்கப்படும் அந்த மர்மக் குரல் யாருடையது, அவரைக் காவல்துறை கண்டுபிடித்ததா, அவரின் பின்னணி என்ன, அவருக்கு எப்படி நடக்கப் போகும் சம்பவங்கள் முன்னமே தெரிகின்றன போன்ற கேள்விகளுக்கு, பி.சதீஷ்குமாரின் அதிவேக திரைக்கதையில் சில லாஜிக் மீறலுடன் பதில் சொல்லியிருக்கிறார்கள் அறிமுக இயக்குநர்கள் பி.ஜி.மோகனும் எல்.ஆர். .சுந்தரபாண்டியும்.

மர்ம நபரைக் கண்டுபிடிக்கும் இளம் காவல்துறை அதிகாரியாக தன் மிடுக்காலும், கோபத்தாலும் ஜெயிக்கிறார் அஜ்மல். அதேநேரம், கடைசி ட்விஸ்ட்டைத் தவிர்த்து, அது ஒரு வழக்கமான இளம் அதிகாரி வேடம் என்பதால், கூடுதலாக அவருக்கு எந்த வேலையையும் திரைக்கதையாசிரியர் கொடுக்கவில்லை. அவருக்கு உதவ துஷ்யந்த் மற்றும் ஜெய்நாத்துடன் ட்ரீமன், மூணாறு ரமேஷ், மதுமிதா ஆகியோர் அடங்கிய கூட்டணி, தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியைச் சிறப்பாகச் செய்திருக்கிறது.

இவர்களுடன் தேவதர்ஷினி, மோகன் ராம், பூர்ணிமா பாக்யராஜ் சில காட்சிகளில் மட்டும் தலை காட்டுகிறார்கள். கௌரவத் தோற்றத்தில் வரும் சத்யராஜ், இந்தப் படத்திற்குப் பெரும்பலமாக மாறியிருக்கிறார். தன் நக்கல், நையாண்டி உடல்மொழியை அளவாகத் தந்து ரசிக்க வைக்கிறார்.

நாஸ்ட்ராடாமஸ், பாபா வங்கா, ஜோதிட கணிப்பு என அறிவியலற்ற தத்துவங்கள் பேசும் மனோதத்துவ டாக்டராக வரும் ஓ.ஜி.மகேந்திரன், திரைக்கதையில் இருக்கும் மர்மத்தை அமானுஷ்யமாக மாற்ற முயன்றார்.

தீர்க்கதரிசி விமர்சனம்

ஒரு மர்ம குரல் vs காவல்துறை என்கிற ஒரு `Cat and Mouse’ கதையில், தேவையான சுவாரஸ்யத்தைத் திரைக்கதையில் சேர்க்காமல், வெறும் பரபரப்பான படத்தொகுப்பை மட்டுமே நம்பி களமிறங்கியுள்ளனர்.

முதற்பாதியில், அந்த மர்ம நபரின் குரலாக வரும் சத்யராஜின் குரல் மீதும், வித்தியாசமான இந்தக் கதைக்களத்தின் மீதும் ஈர்ப்பானது, ஏற்றயிறக்கமில்லாத திரைக்கதையால் காணாமல் போகிறது. அந்த மர்ம குரல் ஒரு டாஸ்க் கொடுக்கிறது, அதை அப்படியே செய்கிறது காவல்துறை. மீண்டும் ஒரு மரணம் குறித்த டாஸ்க், மீண்டும் அதே கதை.

பயங்கரமான பில்டப்புடன் அறிமுகமாகும் அஜ்மலின் கதாபாத்திரம் வந்து இந்த வழக்கைக் கையில் எடுத்த பிறகு, அவரின் முகத்தில் இருக்கும் ஆக்ரோஷம், திரைக்கதையில் எங்குமே உருவாகவில்லை. அதனால், அந்த மர்ம குரலாவது ஏதாவது சுவாரஸ்யம் கூட்டுமா எனப் பார்வையாளர்களை ஏங்க வைக்கிறது. இந்த ஏக்கத்தை, ஓரளவிற்கு பூர்த்தி செய்யும் அந்த மர்ம நபர் தகவல்கள். கொலைகள், விபத்துகள், கொள்ளைகள் போன்றவற்றுக்குத் தொடர்பையும், அதற்குப் பின்னால் இருக்கும் அந்தக் குரலையும் அறிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆவலையும் குறையாமல் காப்பாற்ற, மர்ம குரலாக ஒலிக்கும் சத்யராஜின் குரலும் ஒரு காரணம்.

தீர்க்கதரிசி விமர்சனம்

ஆனால், நமக்கு இருக்கும் ஆவலில் கொஞ்சமேனும் படத்தில் வரும் காவல்துறைக்கு இருந்திருக்கலாம். கால் ரெக்கார்ட், கால் டிராக்கிங், சிசிடிவி ஃபூட்டேஜ், ஜிபிஎஸ் சிக்னல், போலி சிம்கார்ட், குற்றவாளியின் போன் சிக்னல் மாறிக்கொண்டே இருப்பது போன்ற சினிமாக்களில் காலங்காலமாகப் பயன்படுத்தப்படும் அதே டெக்னிக்கல் வார்த்தைகளை காவல்துறை மீண்டும் மீண்டும் பேசுகிறது. போதக்குறைக்கு லாஜிக் மீறல்களும் கைகோர்க்கின்றன. தொடர்ந்து மரணிப்பவர்களுக்கு தொடர்பு என்ன, அவர்களின் பின்னணி என்ன கூடவா காவல்துறை முதலிலேயே துப்புத் துலக்காது?

காவல்துறை கட்டுப்பாட்டு அறையிலும் சென்னையின் பரபரப்பான சாலைகளிலுமே பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன என்றாலும், ஒரு பரபரப்பான படத்திற்குத் தேவையான விறுவிறுப்பை தன் கேமரா கோணங்களால் கடத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜெ.லெக்ஷ்மன். கட்டுப்பாட்டு அறையில் வரும் கிராபிக் டிசைனில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். ஒரு பிடிமானம் இல்லாமல், லாஜிக் ஓட்டைகளோடு தள்ளாடும் திரைக்கதையை இழுத்துப் பிடித்து நிறுத்தியிருக்கிறார் படத்தொகுப்பாளர் ரஞ்ஜீத் சி.கே. அதேநேரம், திரைக்கதையின் வேகத்தில் மட்டும் கவனம் செலுத்த வைத்த கத்திரியை, அழுத்தமான காட்சிகளுக்கு நிதானத்தைக் கொடுக்கவும், தேவையில்லாத காமெடி காட்சிகளை வெட்டித் தூக்கவும் படத்தொகுப்பாளர் பயன்படுத்தியிருக்கலாம்.

தீர்க்கதரிசி விமர்சனம்

இரண்டாம் பாதியில், காவல்துறையின் பெருமைப் பாடும் இசையமைப்பாளர் ஜி.பாலசுப்ரமணியத்தின் பாடல்கள், ரசிக்கும் படியாகவும் இல்லை, திரைக்கதைக்கும் உதவவில்லை. படம் ஓடிய இரண்டு மணிநேரமும் நிற்காமல் ஓடிக்கொண்டேயிருக்கிறது ஜி.பாலசுப்ரமணியத்தின் பின்னணியிசை. சில காட்சிகளில் பரபரப்பைக் கூட்டப் பயன்பட்டாலும், பல தட்டையான காட்சிகளில் தனியாகப் பேசிக்கொண்டிருக்கிறது.

இரண்டாம் பாதியில் வரும் மர்ம குரலின் பின்கதை ஒரு முக்கியமான சமூக பிரச்னையைக் கையில் எடுத்துள்ளது. ஆனால், அதற்கான அரசியல் காரணத்தைப் பேசாமல் இருப்பதாலும், நிதானமாக இருக்க வேண்டிய அக்கட்சிகள் பரபரப்பாக வெட்டப்பட்டாலும், அது எந்தத் தாக்கத்தையும் தராமல் போய்விடுகிறது.

சுவாரஸ்யமான ஒன்லைனை அவசர கதியில் அணுகிய சிக்கலால் படம் தவித்தாலும், அதிவேக என்டர்டெயினராக நம்மை அதிகம் சோதிக்காமல் வெளியே அனுப்புகிறான் இந்த `தீர்க்கதரிசி’.Source link