விதம் விதமாகச் சமைக்க வேண்டும்… ஆனால் சட்டென்றும் சமைத்து முடிக்கும்படி இருக்க வேண்டும். சுவையான சமையலை சீக்கிரம் செய்ய முடியாது என்று யார் சொன்னது? பதினைந்தே நிமிடங்களில் பட்டையைக் கிளப்பும் சூப்பர் ரெசிப்பீஸ் இங்கே உங்களுக்காக… இந்த வார வீக் எந்தை இந்த உணவுகளுடன் ஸ்பெஷலாக்குங்கள்…

அவல் கொழுக்கட்டை

தேவையானவை:

சிவப்பு அவல் – ஒரு கப்

பொடியாக நறுக்கிய வெங்காயம் – ஒன்று

பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை – சிறிதளவு

ஊறவைத்த கடலைப்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன் (விருப்பமெனில்)

ஊறவைத்த கறுப்பு உளுந்து – ஒரு டேபிள்ஸ்பூன் (விருப்பமெனில்)

உப்பு – தேவையான அளவு

அவல் கொழுக்கட்டை

செய்முறை:

சிவப்பு அவலைச் சுத்தம் செய்து தண்ணீரில் 15 நிமிடங்கள் ஊறவைத்து மஸ்லின் துணியைப் பயன்படுத்தி தண்ணீரைப் பிழிந்து எடுக்கவும். பின்னர் அவலுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, ஊறவைத்த கடலைப்பருப்பு, ஊறவைத்த உளுத்தம்பருப்பு, உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறவும். பின்னர் இவற்றைக் கொழுக்கட்டைகளாகப் பிடித்து ஆவியில் வேகவைக்கவும். சட்னியுடன் பரிமாறவும்.

கிரிஸ்பி கார்ன் ஃப்ரை

தேவையானவை:

ஸ்வீட் கார்ன் – ஒரு கப்

சோள மாவு – 4 டேபிள்ஸ்பூன்

மைதா – ஒரு டீஸ்பூன்

எண்ணெய் – பொரிப்பதற்கு

காஷ்மீர் மிளகாய்த்தூள், சாட் மசாலாத்தூள், உப்பு – தேவைக்கேற்ப

கிரிஸ்பி கார்ன் ஃப்ரை

செய்முறை:

ஸ்வீட் கார்ன் முத்துகளைக் கொதிக்கும் தண்ணீரில் போட்டு இரண்டு நிமிடங்கள் வேகவைத்து தண்ணீரை வடித்து எடுக்கவும். சிறிதளவு தண்ணீரில் ஒரு டீஸ்பூன் சோள மாவு, ஒரு டீஸ்பூன் மைதா மற்றும் சிறிது உப்பு சேர்த்து பேஸ்ட் போல் கலக்கவும். இதை வேகவைத்துள்ள ஸ்வீட் கார்ன் முத்துகளுடன் சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.

பின்னர் இந்த ஸ்வீட் கார்ன் கலவையை சோள மாவில் புரட்டி எடுக்கவும். பின்னர் வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி சோள மாவில் புரட்டி எடுத்த ஸ்வீட் கார்ன்களை லேசான பொன்னிறம் வரும்வரை பொரித்தெடுக்கவும். பின்னர் பொரித்த இந்த ஸ்வீட் கார்னின் மேல் காஷ்மீர் மிளகாய்த்தூள், சாட் மசாலாத்தூள் மற்றும் உப்பு தூவி சூடாகப் பரிமாறவும்.

ஹனி கோபி

தேவையானவை:

காலிஃப்ளவர் – ஒரு கப் (உதிர்க்கவும்)

சோள மாவு – 4 டேபிள்ஸ்பூன்

மைதா – ஒரு டீஸ்பூன்

எண்ணெய் – பொரிக்க

பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் – தலா ஒரு டீஸ்பூன்

பொடியாக நறுக்கிய வெங்காயம் – ஒரு டேபிள்ஸ்பூன்

வினிகர் – ஒரு டீஸ்பூன்

சோயா சாஸ் – 2 டீஸ்பூன்

தேன் – ஒரு டேபிள்ஸ்பூன்

வெங்காயத்தாள் – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

ஹனி கோபி

செய்முறை:

காலிஃப்ளவரை சூடான தண்ணீரில் போட்டு இரண்டு நிமிடங்கள் கொதிக்கவிட்டு பின்பு தண்ணீரை வடித்து எடுத்துக்கொள்ளவும். ஒரு டீஸ்பூன் சோள மாவு, ஒரு டீஸ்பூன் மைதா, சிறிதளவு உப்பு, தண்ணீர் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு பேஸ்ட் போல கலந்துகொள்ளவும். பின்னர் இதை காலிஃப்ளவரில் சேர்த்து நன்கு பிசிறிக்கொள்ளவும். பின்னர் இதை மீதமிருக்கும் சோள மாவில் நன்கு புரட்டி சூடான எண்ணெயில் லேசான பொன்னிறம் வரும்வரை பொரித்தெடுக்கவும்.

ஒரு பானில் சிறிது எண்ணெய்விட்டு சூடாக்கி பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும். பின்னர் இதனுடன் வினிகர், சோயா சாஸ் மற்றும் தேவையான உப்பு சேர்த்துக் கிளறவும். பிறகு பொரித்த காலிஃப்ளவரை அதனுடன் சேர்த்து நன்கு கிளறவும். பின்னர் தேனைச் சேர்த்து நன்கு கிளறி கலவையை இறக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயத்தாளை மேலே தூவி சூடாகப் பரிமாறவும்.

குறிப்பு: சோள மாவில் காலிஃபிளவரைப் புரட்டும்போது தேவைக்கு அதிகமாக ஒட்டியிருக்கும் சோள மாவை நீக்கிவிட்டு பிறகு எண்ணெயில் பொரிக்கவும்.

மசாலா மேட் ஆங்கிள்ஸ்

தேவையானவை:

அரிசி மாவு – ஒரு கப்

தண்ணீர் – அரை கப்

காஷ்மீர் மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன்

சாட் மசாலாத்தூள் – கால் டீஸ்பூன்

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

மசாலா மேட் ஆங்கிள்ஸ்

செய்முறை:

தண்ணீரில் உப்பு சேர்த்து கொதிக்கவைத்து இறக்கவும். அரிசி மாவில் தண்ணீரைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து, கலவையை சப்பாத்தி மாவுப் பதத்துக்குக் கலந்து சப்பாத்தி வடிவில் தேய்த்துக் கொள்ள வேண்டும். ஒரு முள்கரண்டியால் சப்பாத்தியை ஆங்காங்கே துளையிடவும். அப்போதுதான் பொரிக்கும்போது குமிழ்கள் வராது.

பின்னர் இந்தச் சப்பாத்தியை சிறிய, சிறிய முக்கோண வடிவங்களாக நறுக்கிக்கொள்ளவும். பின்பு இவற்றை சூடான எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். பொரித்தெடுத்தவற்றின் மேல் உப்பு, காஷ்மீர் மிளகாய்த்தூள், சாட் மசாலாத்தூள் தூவி சூடாகப் பரிமாறவும்.Source link