பா.ஜ.க வெளியிட்ட தி.மு.க சொத்துப் பட்டியலைத் தொடர்ந்து, பி.டி.ஆர் பேசியதாக இரண்டு ஆடியோக்கள் வெளியாகி அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பா.ஜ.க மாநிலத் துணைத் தலைவர் கரு.நாகராஜனிடம் இது தொடர்பாக சில கேள்விகளை முன்வைத்தேன்.

“முதல்வர் மு.க.ஸ்டாலின் மீதான மெட்ரோ ரயில் ஒப்பந்த முறைகேடு பட்டியலை சி.பி.ஐ வசம் தருவதாகக் கூறினர்களே… எப்போது?”

“நிச்சயம் கொடுப்போம். அதில் எந்தச் சந்தேகமும் இருக்க வேண்டியதில்லை.”

“ `துபாய் பயணம் உட்பட ஏற்கனவே இதுபோல பல புகார்களைக் கூறியிருக்கிறீர்கள்… அவை என்னவாகின?’ என தி.மு.க கூட்டணிக் கட்சிகள் கேள்வியெழுப்புகின்றனவே?”

“தினசரி தவறு நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஒன்றையே எங்களால் ஃபாலோ செய்ய முடியாது. அடுத்தடுத்த பிரச்னைகள் வரும்போது அவசியம் பேசத்தான் வேண்டும். `முந்தைய குற்றச்சாட்டுகளை நிரூபித்துவிட்டு அடுத்ததற்கு வா’ என்றால் எங்கே போவது… குற்றம் செய்யாதீர்கள் என்றுதான் சொல்ல முடியும். மக்கள் பணம் வீணாகக் கூடாது, ஊழல் செய்யக் கூடாது என்று சொல்வது எங்கள் கடமை. அதை அண்ணாமலை செய்கிறார்.”

ஸ்டாலின் – அண்ணாமலை

“பி.டி.ஆர் ஆடியோ விவகாரம் மட்டமான அரசியல் என முதல்வர் கூறுகிறாரே?”

“குரல் பதிவை உண்மை கண்டறியும் சோதனைக்கு அனுப்பத் தயாரா என அண்ணாமலை விடுத்த சவாலுக்கு இதுவரை பி.டி.ஆர் பதில் சொல்லவில்லை. ஆனால், இது மட்டமான அரசியல், குட்டமான அரசியல் என முதலமைச்சர் சொல்கிறார். இந்த வழக்கை தனிப்பட்ட முறையில் பி.டி.ஆர் சந்திக்க வேண்டும் என்கிறார் டி.கே.எஸ்.இளங்கோவன். 30,000 கோடி ரூபாய் குற்றச்சாட்டுக்கு பதில் எங்கே என மக்கள் தேடுகிறார்கள்.

“மத்திய அரசு உங்கள் கையில்தானே இருக்கிறது… நீங்களே நடவடிக்கை எடுக்கலாமே?”

“நிச்சயமாக வாய்ப்பிருக்கும்.”

கரு.நாகராஜன் – அண்ணாமலை

“ஆனால் அரசியல்ரீதியாகப் பேசுகிறீர்களே தவிர, விசாரணைக்கான எந்த முகாந்திரமும் தென்படவில்லையே?”

“ஒரு புகார் எழுந்த உடனேயே விசாரணை அமைப்புகளைத் தொடங்குவதில்லை. நாங்கள் விசாரணை அமைப்புகளுக்கு உத்தரவு போட முடியாது.”

“Dmk Files வெளியானதைத் தொடர்ந்து ஜி ஸ்கொயர் நிறுவனம் தொடர்பான இடங்களில் ரெய்டு நடந்ததற்கு பா.ஜ.க அழுத்தம்தான் காரணம் என விமர்சனங்கள் எழுந்துள்ளனவே?”

“ஜி ஸ்கொயர் ரெய்டு நடந்தது என்ன, அது ஏதோ Dmk Files வெளியிடப்பட்டதற்கு பிறகு நடந்ததல்ல. பல நாட்கள் அவர்களை ஃபாலோ செய்து, அவர்களின் கணக்குகளை ஆய்வு செய்த பிறகுதான் ரெய்டு நடத்தப்பட்டது. அதுபோல மற்ற ஊழல் குற்றச்சாட்டுகளிலும் விசாரணை அமைப்புகள் முறையாக ஆய்வுசெய்து ரெய்டு நடத்தும்.”Source link