டாக்டர் விகடன்: என் வயது 28. காலையில் எழுந்ததும் சுமராக 50 முதல் 60 தும்மல் போடுகிறேன். அரைமணி நேரம் இது நீடிக்கிறது. வெயில் காலத்திலும் அப்படித்தான். மற்றவர்களை தர்மசங்கடப்படுத்தும் இந்தப் பிரச்னைக்கு என்ன காரணம்… இதிலிருந்து மீள தீர்வுகள் உண்டா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ஆஸ்துமா, அலர்ஜி சிகிச்சை சிறப்பு மருத்துவர் ஸ்ரீதரன்
தூசி அல்லது நெடியின் காரணமாக யாருக்கும் தும்மல் வரலாம். அப்படி வருவது ஒன்றிரண்டு தும்மலுடன் நின்றுவிடும். ஆனால் அதுவே நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல 50, 60 என அடுக்கடுக்காக தும்மல் போட்டால், அது அலர்ஜியின் காரணமாக வந்ததாக இருக்கலாம்.
தொடர் தும்மலுக்கு ‘அலர்ஜிக் ரைனிட்டிஸ்’ (அலர்ஜிக் ரைனிடிஸ்) எனப்படும் பிரச்னையே காரணம். அதாவது ஒவ்வாமையின் விளைவால் மூக்கின் உள்ளே சவ்வில் ஏற்படும் அழற்சி அல்லது வீக்கத்தைக் குறிக்கும் பிரச்னை இது. பலருக்கும் இந்த ஒவ்வாமையானது மூக்கின் உள்சவ்வு அழற்சியோடு மட்டும் நிற்காமல், சைனஸ் என்கிற பாதிப்பையும் ஏற்படுத்தும். மூக்கைச் சுற்றியுள்ள காற்றறைகளில் ஏற்படும் ஒவ்வாமையாலும் தும்மல் வரலாம்.