கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சியில் வீரசக்கதேவி ஆலய திருவிழா தொடங்கியது. கட்டபொம்மன் சிலைக்கு மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டம் பாஞ்சாலங்குறிச்சியில் அமைந்துள்ள சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு கோட்டையில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் விழாவாகவும், வீரசக்கதேவி ஆலய திருவிழாவாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி நேற்று வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு அரசு சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். வீரபாண்டிய கட்டபொம்மனின் வாரிசுதாரர் வீமராஜா என்ற ஜெக வீரபாண்டிய கட்டபொம்மன் துரையின் வீட்டுக்கு சென்று மாவட்ட வருவாய் அலுவலர் சால்வை அணிவித்து கவுரவப்படுத்தினார்.
பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய ஆண்டு விழாவை முன்னிட்டு, பல்வேறு இடங்களில் இருந்து பாஞ்சாலங்குறிச்சிக்கு தொடர் ஜோதி ஓட்டம் நடைபெற்றது. ஜோதி ஓட்டத்துக்கு போலீஸார் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தனர். ஜோதிக்கு பின்னால் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டதை கண்டித்து விழாவை நிறுத்துவதாக விழாக் குழுவினர் அறிவித்தனர்.
மேலும் பாஞ்சாலங்குறிச்சி கிராம பொதுமக்கள் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வீரச்சக்கதேவி ஆலய குழுவினரிடம் மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது.
ஜோதிக்கு பின்னால் குறிப்பிட்ட எண்ணிக்கையில் தொடர் இடைவெளி விட்டு இருசக்கர வாகனங்கள் மற்றும் செண்டை மேளம், ஒலிபெருக்கி செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
வீரச்சக்கதேவி ஆலயக் குழுவினர் ஆலயத்தில் விழா ஏற்பாடுகளைத் தொடங்கினர். வீரச்சக்கதேவி ஆலய கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. வீரபாண்டிய கட்டபொம்மன் சந்ததியைச் சேர்ந்த பெண்கள் பால்குடம் எடுத்து வழிபாடு செய்தனர். வீரசக்கதேவி ஆலய விழா இன்று (மே 13) தொடர்ந்து நடைபெறுகிறது.
இதை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நாளை (மே 14) காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நெல்லை சரக டிஐஜி பிரவேஷ் குமார், தூத்துக்குடி எஸ்பி எல்.பாலாஜி சரவணன் ஆகியோர் தலைமையில் சுமார் 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். முக்கிய சாலைகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.