புதுடெல்லி: தென் இந்தியாவின் ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு, கர்நாடகாமற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் மொத்தம் 129 மக்களவை தொகுதிகள் உள்ளன. இவற்றில் கர்நாடகா, பாஜகவிற்கு கால் பதிக்கும் நுழைவு வாயில் போன்றது.

இந்த 129 ல் பாஜகவிடம் தற்போது 29 எம்பிக்கள் உள்ளனர். கர்நாடகா ஆட்சி இழப்பால் பாஜகவிற்கு 2024 மக்களவை தேர்தலில் சிக்கல் ஏற்படும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது.

கர்நாடகா மூலமாக தெலங்கானாவையும் கைப்பற்ற பாஜக தீவிரம் காட்டியது. ஆனால், கர்நாடகா தோல்வியின் தாக்கம், பாஜகவிற்கு அந்தந்த பகுதிகளில் கால் பதிப்பில் தடையாகி விட்டது.

மாநிலங்களில் தேசிய தலைவர்களின் ஆதிக்கம், பாஜகவில் அதிகம் எனும் புகார் உண்டு. மாநில ஆட்சியை பிடிக்க மாநிலத் தலைவர்களும் முக்கியம் என்பதை பாஜகவிற்கு கர்நாடகா தேர்தல் உணர வைத்துள்ளது. பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜோடியின் வழக்கமான பிரச்சாரம் மற்றும் தேர்தல் வியூகங்கள் கர்நாடகாவுக்கு, சிக்கலை ஏற்படுத்தி விட்டன.

மேலும், பிரதமர் மோடியை முன்னெடுத்த 2014, 2019 மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணியில் இருந்த அகலிதளம், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், சிவசேனா கட்சிகள் உறவைத் துண்டித்துக் கொண்டன.

இந்த காரணத்தால் பாஜகவிற்கு வரும் மக்களவை தேர்தலில், தொகுதிகள் எண்ணிக்கை குறையும் வாய்ப்புகள் எழுந்துள்ளன. இவற்றை சமாளிக்க பாஜக, கர்நாடகாவின் ஆட்சியை தக்கவைத்து தென் மாநிலங்களில் கனிசமான தொகுதிகளை பெற திட்டமிட்டிருந்தது. இதே நோக்கத்திற்காக முஸ்லிம்களுடன் நட்புக்கரம் நீட்டவும் துவங்கியது. எனினும் கர்நாடக தேர்தல் முடிவு பாஜக.வுக்கு சிக்கலையே ஏற்படுத்தி உள்ளது.

அதேநேரத்தில் காங்கிரஸுக்கு உற்சாக மூட்டி உள்ளது. கடைசியாக ஆந்திரா மற்றும் கேரளாவில் ஆட்சியை இழந்த காங்கிரசுக்கு இனி தென் இந்தியாவில் வெற்றி என்பது கனவானது. கர்நாடகா, கேரளாவில் எதிர்க்கட்சி அந்தஸ்தில் இருந்தாலும் இதர மாநிலங்களில் கூட்டணி பலத்தால் நிற்க வேண்டிய நிலை.

இச்சூழலில், தென் மாநிலங்களின் பெரும்பாலான தொகுதிகளில் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நடத்திய பாத யாத்திரை ஒரு முன்னேற்றத்தைக் காட்டியது.

உதாரணமாக அவர் கர்நாடகாவில் யாத்திரை மேற்கொண்ட 20 தொகுதிகளில் 15-ல் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. தனது யாத்திரையின் முடிவில் ராகுலை எதிர்க்கட்சிகள் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த முயற்சிக்கப்பட்டது. ஆனால், அவதூறு வழக்கில் ராகுலுக்கு கிடைத்த தண்டனை அந்த வாய்ப்பை தற்போதைக்கு தடுத்துள்ளது. தேர்தல் சட்டப்படி ராகுல் இனி 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட முடியாது.

இதனிடையே, எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராகப் பேசப்பட்ட பிஹார் முதல்வர் நிதிஷ்குமார், கூட்டணி முயற்சியை மீண்டும் துவக்கினார். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக, ராகுலை பிரதமர் வேட்பாளராகக் கூடாது என்ற நிபந்தனையை பலரும் விதித்து கூட்டணிக்கு ஆதரவளித்ததாகக் கூறப்பட்டது. இதில், மம்தா, கேஜ்ரிவால், கே.சந்திரசேகரராவ் உள்ளிட்டோர் இருந்தனர்.

இந்நிலையில், கர்நாடகாவில் காங்கிரஸின் வெற்றிக்கு ராகுலும் ஒரு காரணகர்த்தாவாகி உள்ளார். இதன் காரணமாக அவரது கட்சியினர் ராகுலை மீண்டும் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் எனப் பேசத் துவங்கியுள்ளனர். அதேவேளையில் ராகுலின் முன்னிருத்தலையே காரணமாகி எதிர்கட்சிகளில் சிலர் ஒன்றிணையாமல் போகும் அச்சமும் எழுந்துள்ளது.

எனவே, காங்கிரஸும் தன் வெற்றியை அடக்கி வாசிப்பது நன்மை பயக்கும் என அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். மேலும் கர்நாடகம் உட்பட கட்சியின் வெற்றி, பலத்தை காட்டி, மக்களவைக் கூட்டணிகளுடன் அதிக தொகுதிகளை கேட்கலாம்.

ஏனெனில், அடுத்து மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக வரவிருக்கும் மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் தேர்தல்களும் மக்களவைக்கு முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே, கர்நாடகா முடிவுகளின் தாக்கம் தேசிய அரசியலில் தவிர்க்க முடியாததாகி விட்டது.

Source link