உதகை: உதகை தாவரவியல் பூங்காவில் 125வது மலர் கண்காட்சி நேற்று முன்தினம் தொடங்கியது. மலர் கண்காட்சியை காண நேற்று சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.

மலர் அலங்காரங்கள் முன்பு நின்று செல்ஃபி மற்றும் புகைப்படம் எடுத்தனர். கடந்த 2 நாட்களில் மலர் கண்காட்சியை 40 ஆயிரம் பேர் கண்டு ரசித்ததாக தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் மலர் கண்காட்சியையொட்டி, உதகை தாவரவியல் பூங்காவில் நுழைவுக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே இருந்த கட்டணம் கடந்த 2018-ம் ஆண்டு இரட்டிப்பாக்கி ஒரு நபருக்குரூ.30 வலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது மலர்கண்காட்சிக்கான நுழைவுக்கட்டணம்ரூ.100 ஆக உயர்த்தி வசூலிக்கப்படுகிறது. சிறுவர்களுக்கு ரூ.50 வசூலிக்கப்படுகிறது. மேலும், புகைப்பட கேமராவுக்கு ரூ.100 மற்றும் வீடியோ கேமராவுக்கு ரூ.300 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மலர் கண்காட்சி நடைபெறும் ஐந்து நாட்கள் இந்த கட்டணம் வசூலிக்கப்படும் என தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சுற்றுலா பயணிகள் கூறும் போது, ​​”உதகை மலர் கண்காட்சி சிறப்பாக உள்ளது. மலர் அலங்காரங்கள் பிரமிப்பாக உள்ளன. உதகை காலநிலை மிகவும் ரம்மியமாக இருப்பதால், நாங்கள் பூங்காவை வெகுவாக ரசிக்கிறோம்.

பூங்காவில் மலர் அலங்காரங்களை தவிர, பிற இடங்களில் பூக்கள் பூக்காதது ஏமாற்றமளிக்கிறது. மேலும், கண்காட்சிக்கான நுழைவுக் கட்டணம் ரூ.100 வசூலிப்பது அதிகமாகும். எந்த வித முன்னறிவிப்பின்றி உயர்த்தப்பட்ட நுழைவு கட்டணத் தொகையை குறைக்க வேண்டும்,” என்றனர்.

Source link