பெங்களூரு: கணவர் மீது கொண்ட அன்பின் காரணமாக அவரது பெயரை தனது நெற்றியில் பெங்களூரைச் சேர்ந்த பெண் ஒருவர் பச்சைக் குத்திக் கொண்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கிங் மேக்கர் டாட்டூ ஸ்டூடியோ உள்ளது. இந்நிலையத்துக்கு கடந்த மார்ச் மாதம் வந்த பெண் ஒருவர் தனது கணவர் சதீஷின் பெயரை தனது நெற்றியில் பச்சையாகக் குத்திக் கொண்டுள்ளார்.
இதுதொடர்பான வீடியோவை கிங் மேக்கர் டாட்டூ ஸ்டூடியோ இன்ஸ்டாகிராம் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது. கணவர் சதீஷின் மீது கொண்ட அன்பின் காரணமாக அவரது பெயரை நெற்றியில் டாட்டூவாக அவர் போட்டுக்கொண்டார் என்று கிங் மேக்கர் டாட்டூ ஸ்டூடியோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் 18ஆம் தேதி வெளியான இந்த வீடியோவை இதுவரை 1.25 கோடி பேர் பார்த்துள்ளனர். மேலும் 2.6 லட்சம் பேர் இந்த வீடியோவுக்கு லைக் போட்டுள்ளனர்.
கணவரின் பெயரை நெற்றியில் பச்சைக் குத்திக் கொண்ட பெண்ணுக்கு பலர் பாராட்டுகளைத் தேடினர். அதே நேரத்தில் பலர் எதிர்ப்பும் பதிவு. கணவர் மீது கொண்ட அன்பை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சிலர் அந்த பெண்ணைத் திட்டி வருகின்றனர்.
இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பயனாளர் ஒருவர் கூறும்போது, “இதை முட்டாள்தனம் என்று சொல்வதைத் தவிர வேறில்லை. அக்கறை, பாசம், முன்னுரிமை, எதுவாக இருந்தாலும் அவருடன் இருப்பது, ஆதரவளித்தல், மேம்படுத்துதல், புரிந்து கொள்ளுதல் ஆகியவற்றால்தான் அன்பு உணரப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.