மதுரை, திருமங்கலம் அருகே நான்கு தலைமுறைகளைக் கண்ட 98 வயது மூதாட்டியின் பிறந்தநாள் விழாவை, அவரது வாரிசுகள் மிகச்சிறப்பாகக் கொண்டாடியுள்ளனர். கூடவே அந்த பாட்டியின் 105 வயது அக்காவும் அதில் கலந்து கொண்டது மகிழ்ச்சியையும் ஆச்சர்யத்தையும் இரட்டிப்பாக்கியுள்ளது.

நான்கு தலைமுறையினருடன் பாட்டி

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகேயுள்ள கூடக்கோவிலைச் சேர்ந்தவர்கள் ராசு – வேலாய் தம்பதி. இவர்களுக்கு 6 மகன்கள், 3 மகள்கள் என மொத்தம் ஒன்பது பிள்ளைகள்.

வேலாய் பாட்டியின் கணவர் ராசு, 93 வயதில் மரணமடைந்த நிலையில் பிள்ளைகளுடன் வசித்து வரும் வேலாய் பாட்டிக்கு தற்போது 98 வயதாகிறது. இப்போதும் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார் பாட்டி.

கேக் வெட்டும் வேலாய் பாட்டி

வேலாய் பாட்டியின் 98வது பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாட அவரது வாரிசுகள் மற்றும் பேரன், பேத்திகள் ஏற்பாடுகளைச் செய்தனர்.

வேலாய் பாட்டியின் பிள்ளைகள், அவர்களின் பிள்ளைகள், அவர்களின் பிள்ளைகள் என நான்கு தலைமுறையினரும் கலந்து கொள்ள, நேற்று பிறந்தநாள் விழா கூடக்கோயிலில் சிறப்பாக நடந்தது. வந்திருந்த அனைவரும் பிறந்தநாள் வாழ்த்துகளைப் பாட, பாட்டி வேலாய் உற்சாகமாக கேக் வெட்டினார்.

இரண்டு பாட்டிகளுடன் வாரிசுகள்

இந்நிகழ்வில் பாட்டியின் வழி வந்த நான்கு தலைமுறையினர் வந்திருந்து வாழ்ந்தது மட்டுமன்றி, கூடுதல் சிறப்பாக வேலாய் பாட்டியின் அக்கா 105 வயதான கருப்பாயி பாட்டியும் பங்கேற்றார்.

வேலாய் பாட்டியின் பிறந்தநாள் விழாவில் கூடக்கோவில் கிராம மக்களும் கலந்து கொண்டு இரண்டு மூதாட்டிகளையும் வாழ்த்தினர்.



Source link