திருவனந்தபுரம்: சந்திரயான்- 3 வெற்றியடைந்ததையடுத்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் திருவனந்தபுரத்தில் உள்ள பௌர்ணமிகாவு பத்ரகாளி கோயிலுக்குச் சென்று வழிபட்டார்.

நிலவில் தரையிறங்கி ஆராய்வதற்காக இஸ்ரோ உருவாக்கிய சந்திரயான்-3 விண்கலம், எல்விஎம்-3 ராக்கெட் மூலம் கடந்த ஜூலை 14-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. பல்வேறு கட்டமாக 41 நாள் பயணத்துக்குப் பிறகு நிலவின் தென்துருவப் பகுதிக்கு அருகே சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் பாகம் கடந்த 23-ம் தேதி மாலை 6.04 மணிக்கு வெற்றிகரமாக தரையிறங்கியது. இதன்மூலம் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு எனும் பெருமையை இந்தியா பெற்றது. சில மணி நேரங்களுக்கு பின்னர் லேண்டரில் இருந்த ரோவர் வாகனமும் பத்திரமாக நிலவின் தரைப்பகுதிக்கு கொண்டு வரப்பட்டது. இந்த வெற்றியை ஒட்டுமொத்த இந்தியாவும் கொண்டாடி மகிழ்ந்தது. உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் இந்தியாவின் இந்த சாதனையை பாராட்டினர்.

இந்த நிலையில், சந்திரயான்- 3 வெற்றியடைந்ததையடுத்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் திருவனந்தபுரத்தில் உள்ள பௌர்ணமிகாவு பத்ரகாளி கோயிலுக்குச் சென்று வழிபட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: “நான் ஒரு ஆய்வாளர். நான் நிலவை ஆராய்கிறேன். மனதையும் ஆராய்கிறேன். அறிவியல் மற்றும் ஆன்மீகம் இரண்டையும் ஆராய்வதற்கான எனது வாழ்க்கைப் பயணத்தின் ஒரு பகுதி இது. அதனால் நான் பல கோவில்களுக்கு செல்கிறேன். பல வேத நூல்களையும் படிப்பேன்.

எனவே இந்த பிரபஞ்சத்தில் நமது இருப்பு மற்றும் நமது பயணத்தின் அர்த்தத்தை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறேன். இது நமது கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகும். எனவே என்னுடைய புறத்துக்காக நான் அறிவியலை ஆய்வு செய்கிறேன். அகத்திற்காக கோயில்களுக்கு வருகிறேன்” இவ்வாறு சோம்நாத் தெரிவித்தார்.

Source link