சென்னை: நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் குறித்து எழுதியுள்ள சமூக வலைதள பதிவு, விஜய் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘லியோ’. இந்தப் படம் அக்.19-ம் தேதி வெளியாக இருக்கிறது. இதையடுத்து அவர் வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் விஜய் 3 வேடங்களில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. சினேகா, பிரியங்கா அருள் மோகன் நாயகிகளாக நடிக்க இருப்பதாகத் தெரிகிறது. இதில் விஜய்யின் ஒரு கதாபாத்திரத்தை இளமையாகக் காண்பிக்க இருக்கின்றனர். இதற்காக படக்குழு சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்தது. அங்கு கலிபோர்னியாவில் உள்ள சிஜி நிறுவனம் ஒன்றில், 3டி விஎஃப்எக்ஸ் (3D VFX) டெக்னாலஜியில் அவர் உடலை ஸ்கேன் செய்துள்ளனர். அந்தப் பணி முடிந்து நடிகர் விஜய் அண்மையில் சென்னை திரும்பினார்.

இந்த நிலையில், சென்னை திரும்பிய அவர் நேற்று (செப்.14) தனது பெற்றோரை நேரில் சந்தித்தார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. இது குறித்து விஜய்யின் தந்தை நெகிழ்ச்சியுடன், ’உறவும், பாசமும் மனித மனத்தின் மாமருந்து’ என பதிவிட்டிருந்தார். தற்போது புஸ்ஸி ஆனந்த் உடனான புகைப்படத்தை தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், “பிள்ளைகள் ஒன்று சேரும்போது பெற்றோருக்கு மட்டும் அல்ல, மொத்த குடும்பத்துக்கே வலிமை கூடுகிறது” என தெரிவித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக எஸ்.ஏ.சந்திரசேகருக்கும், புஸ்ஸி ஆனந்துக்கும் இடையே நிலவி வந்த கருத்து வேறுபாடு தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Source link