நாமக்கல் பரமத்தி சாலையிலுள்ள உணவகம் ஒன்றில் ஷவர்மா வாங்கிச் சாப்பிட்ட 14 வயது சிறுமி உயிரிழந்திருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதே உணவகத்தில் உணவு வாங்கிச் சாப்பிட்ட 40-க்கும் மேற்பட்டோரும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது பரபரப்பைக் கூட்டியிருக்கிறது. அதையடுத்து, நாமக்கல் மாவட்டத்தில் ஷவர்மா மற்றும் கிரில் சிக்கன் விற்பனைக்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

ஆய்வின்போது

ஆய்வின்போது

இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை எழுப்பியிருக்கிறது. தமிழகம் முழுவதும் உணவகங்களுக்குச் சென்று, அங்குள்ள உணவுகளின் தரத்தை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அந்தவகையில், திருச்சி மாநகரிலுள்ள உணவகங்களில் நடைபெற்ற ஆய்வுகளின்போது, கிலோ கணக்கில் கெட்டுப்போன இறைச்சி கண்டுபிடிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் ரமேஷ்பாபு தலைமையிலான அதிகாரிகள், திருச்சி தில்லை நகர் – சாஸ்திரி ரோடு – சாலை நகர் பகுதிகளைச் சுற்றியிருக்கும் உணவகங்களில் நேற்று (19.09.2023) ஆய்வில் இறங்கினர். குறிப்பாக ஷவர்மா, கிரில் சிக்கன் போன்ற துரித உணவுகளை விற்பனை செய்யும் சுமார் 21 கடைகளில் ஆய்வு நடத்தினர். அப்போது பல கடைகளில் கிலோ கணக்கில் கெட்டுப் போன இறைச்சிகளும், சுகாதாரமற்ற வகையில் சமைத்து வைக்கப்பட்டிருந்த இறைச்சிகளும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. சுமார் 90 கிலோ அளவுக்கு கண்டுபிடிக்கப்பட்ட இந்தக் கெட்டுப்போன இறைச்சிகளை, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் குப்பையில் கொட்டி அழித்தனர். இதில் 9 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006, பிரிவு 55-ன் கீழ் நோட்டீஸ் வழங்கி நடவடிக்கை எடுத்ததோடு, இதில் ஆறு கடைகளுக்கு தலா 3,000 ரூபாய் அபராதத்தையும் விதித்தனர்.Source link