ராமேசுவரம்: ராமேசுவரம் வரும் சுற்றுலாப் பயணிகள் உட்பட அனைவரையும் ஈர்க்கும் வகையில் பேக்கரும்பில் உள்ள அப்துல்கலாம் தேசிய நினைவிடம் திகழ்கிறது.

“கனவு காணுங்கள், கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல. உன்னைத் தூங்க விடாமல் பண்ணுவது எதுவோ, அதுவே கனவு. கனவு மலரட்டும்! கனவுகள்தான் எண்ணங்களாக வடிவம் பெறுகின்றன. எண்ணங்களே செயல்களாக பரிணமிக்கின்றன” என்று கூறி குழந்தைகளையும், மாணவர்களையும், இளைஞர்களையும் நாட்டின் முன்னேற்றம் பற்றி கனவு காண வைத்தவர் நம் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம். அவருக்கு இன்று 92-வது பிறந்த தினம்.

27.07.2015 அன்று அப்துல் கலாம் மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் உள்ள கல்லூரி விழாவில் மாணவர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது காலமானார். கலாமின் உடல் அவர் பிறந்த ராமேசுவரம் தீவில் உள்ள பேக்கரும்பு என்னும் இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

கலாமின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், அவரது நினைவாக மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டி.ஆர்.டி.ஓ) சார்பாக மூன்றரை ஏக்கரில் ‘அப்துல் கலாம் தேசிய நினைவகம் 27.07.2017 அன்று பிரதமர் நரேந்திர மோடி பொது மக்கள் பார்வைக்காக திறந்து வைத்தார். அப்துல் கலாமின் ஆர்வம் மற்றும் விருப்பங்களைக் கருத்தில் கொண்டு இந்த நினைவகம் கட்டப்பட்டுள்ளது.

ராமேசுவரத்தில் உள்ள அப்துல் கலாம் தேசிய நினைவிடம்

நினைவிடக் கட்டிடத்தின் குவிமாடம் ராஷ்ட்ரபதி பவனை பிரதிபலிக்கும் வகையிலும், பிரதான கதவு இந்தியா கேட் போலவும் வடிவமைக்கப் பட்டுள்ளது. நினைவிடத்துக்குப் பயன்படுத்தப்பட்டுள்ள மஞ்சள் நிறக் கற்கள் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரிலிருந்தும், சிவப்பு நிறக் கற்கள் ஆக்ராவிலிருந்தும் கொண்டு வரப்பட்டு பதிக்கப்பட்டுள்ளன.

நினைவிடத்துக்கு வெளியே உள்ள தோட்டம் ‘முகல்’ கார்டன் எனப்படும் ‘அம்ருத் உதான்’ தோட்டத்தை ஒத்திருக்கிறது. இங்குள்ள மரங்கள், செடிகள் தமிழகம் தவிர கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் கேரளத்தில் இருந்து கொண்டு வரப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. நினைவிடத்தின் பின் பகுதியில் கலாமின் 7 அடி உயர வெண்கலச் சிலையும், 45 அடி உயரத்தில் அக்னி-II ஏவுகணையின் மாதிரியும் நிறுவப்பட்டுள்ளன. நினைவிடம் உள்ளே நான்கு அரங்குகளைக் கொண்டது.

இதில் பிரார்த்தனைக் கூடம், கலாமின் மாணவப் பருவம், விஞ்ஞானி இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ), மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஆகியவற்றில் பணியாற்றிய காலம், குடியரசுத் தலைவராகப் பணியாற்றிய காலம், உலகத் தலைவர்களுடன் கலாமின் அரிய புகைப்பட ஓவியங்கள் மற்றும் உருவச் சிலைகள், கண்டுபிடிப்பின் மாதிரி வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கலாம் நினைவகத்தின் நுழைவுப் பகுதியில் கலாம் வீணை வாசித்தபடி அமர்ந்திருக்கும் வெண்கலச் சிலை, கலாம் பயன்படுத்திய பொருட்கள், நூல்கள், உடைகள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் ராமேசுவரத்தில் சிறுவனாக இருந்தபோது செய்தித்தாள் விற்பனை செய்தது முதல் இந்தியாவின் ஏவுகணை மனிதராகவும், குடியரசுத் தலைவரானது வரையிலும் அறிந்து கொள்ளலாம்.

ஷேக் சலீம்

நினைவிடம் குறித்து கலாமின் பேரன் ஷேக் சலீம் கூறியதாவது: நாளொன்றுக்கு 7,000 பேர் நினைவிடத்தைப் பார்வை யிடுகின்றனர். இதுவரையிலும் சுமார் 1.20 கோடி பேர் இங்கு அஞ்சலி செலுத்தி உள்ளனர். ராமநாத சுவாமி கோயிலுக்கு பக்தர்கள் மற்றும் சுற்றுலா வருவோர்தான் முன்பெல்லாம் ராமேசுவரம் வருவார்கள்.

ஆனால், இப்போது அப்துல் கலாமின் தேசிய நினைவகத்துக்கு பள்ளி, கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி அனைத்துத் தரப்பு மக்களும் வருகின்றனர். இந்திய மக்கள் அப்துல் கலாமை எவ்வளவு நேசித்தார்கள் என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. மத்திய அரசால் கலாமின் தேசிய நினைவிடம் திறக்கப்படும்போதே மாணவர்கள்,

இளைஞர்களுக்குப் பயன்படும் வண்ணம் டிஜிட்டல் நூலகம், தொழில் நுட்ப கண்காட்சியகம், அறிவியல் ஆராய்ச்சி மையம் போன்றவை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. விரைவில் மத்திய அரசு அறிவித்தது போல நினைவகத்தை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறினார்.

அப்துல் கலாம் தேசிய நினைவிடத்தை காலை 9 முதல் மாலை 5 மணி வரையிலும் பார்வையிடலாம். மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் நினைவிடம் அமைந்திருப்பதால் பேருந்து மற்றும் பிற வாகனங்களிலும் வந்து பார்வையிடலாம். மாற்றுத் திறனாளிகள் நினைவிடத்துக்குள் சென்று பார்வையிட சிறப்பு வசதி உள்ளது.





Source link