உதகை: இளைய தலைமுறையின் கல்வி அறிவை மேம்படுத்தும் வகையில், தமிழக அரசு சார்பில் மாநிலம் முழுவதும் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் உதகையிலுள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நேற்று முன்தினம் புத்தகத் திருவிழா தொடங்கியது. வரும் 29-ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாள் விழாவில், திரைப்பட இயக்குநர் சீனு ராமசாமி உட்பட எழுத்தாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
2-வது நாளான நேற்று நடந்த விழாவில் திரைப்பட நடிகர் பொன் வண்ணன் கலந்து கொண்டு பேசினார். இந்த புத்தக திருவிழாவில் 50-க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டு, பல்வேறு புத்தகங்கள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. புத்தகத் திருவிழா நடைபெறும் அனைத்து நாட்களிலும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் இலக்கிய சொற்பொழிவு இடம் பெறுகின்றன.
உணவகங்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு அரங்குகள், பொழுது போக்கு அம்சங்களும் இடம் பெற்றுள்ளன. மாணவா்கள், பொது மக்களின் புத்தக வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கும் நோக்கில், இலவசமாக நடைபெறும் இப்புத்தகக் கண்காட்சியில் பங்கேற்க கட்டணம் கிடையாது.