புதுடெல்லி: 6ஜி தொழில்நுட்பத்தில் உலகை இந்தியா தலைமை தாங்கும் என பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் நடைபெற்ற 7-வது இந்திய மொபைல் மாநாட்டை தொடங்கி வைத்து அவர் இதனை தெரிவித்தார்.

“4ஜி சேவையை ஊழல் இல்லாமல் கட்டமைத்தோம். இணைய வசதி வாழ்வை மேம்படுத்த உதவுகிறது. அது சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் வளர்ச்சியை கொண்டு வந்தது. மக்கள் அனைவருக்கும் தொழில்நுட்பம் தடையின்றி சென்று சேர வேண்டும். நேரடியாக வங்கிக் கணக்கில் பணம் செலுத்துவது மக்களுக்கான உரிமையை வழங்குகிறது.

2 லட்சம் கிராம பஞ்சாயத்துகள் பிராட்பேண்ட் இணைப்பை பெற்றுள்ளது. அடல் டிங்கரிங் லேப்ஸ் மூலம் 75 லட்சம் மாணவர்கள் புது யுக தொழில்நுட்பத்தின் பலன்களைப் பெற்று வருகின்றனர். 5ஜி லேப்ஸ் மாணவர்களின் கனவினை மெய்ப்பிக்கும். உலகின் 3-வது பெரிய ஸ்டார்ட்அப் சூழல் கொண்டுள்ள அமைப்பாக இந்தியா விளங்குகிறது.

அதே போல உலக அளவில் மொபைல் போன் உற்பத்தியில் பிரதான பங்கு வகிக்கும் நாடுகளில் 2-வது இடத்தில் இந்தியா உள்ளது. கூகுள் நிறுவனம் பிக்சல் போன் உற்பத்தியை இந்தியாவில் மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளது. ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்கள் இந்தியாவில் போன் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. செமிகண்டக்டர் சிப் உற்பத்தியும் மேற்கொண்டு வருகிறோம். அது உள்நாடு மற்றும் வெளிநாட்டு தேவையை பூர்த்தி செய்ய உள்ளது. யுபிஐ நமது அடையாளமாக மாறி உள்ளது. 6ஜி தொழில்நுட்பத்தில் உலகை இந்தியா தலைமை தாங்கும்” என பிரதமர் மோடி தெரிவித்தார்.

‘சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் ஏற்கனவே இந்தியாவின் 6ஜி விஷனை ஏற்றுக்கொண்டுள்ளது. அடுத்த ஆண்டு இது தொடர்பான கூட்டம் இந்தியாவில் நடைபெற உள்ளது’ என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்த மாநாட்டில் தெரிவித்தார்.

ஜியோ நிறுவனம் 85 சதவீத 5ஜி கவரேஜை கொண்டுள்ளதாக ரிலையன்ஸ் ஜியோ தலைவர் ஆகாஷ் அம்பானி இந்த நிகழ்வில் தெரிவித்தார். அடுத்த ஆண்டு இறுதியில் இந்தியா முழுவதும் 5ஜி நெட்வொர்க் கிடைக்கும் என சுனில் மிட்டல் தெரிவித்தார். 5ஜி ரோல்-அவுட்டில் தங்கள் நிறுவனம் முதலீடு குறித்து குமார் மங்கலம் பிர்லா பேசி இருந்தார்.

Source link