உலகக்கோப்பையின் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை எதிர்கொள்ளவிருக்கிறது. இந்நிலையில், போட்டிக்கு முன்பான பத்திரிகையாளர் சந்திப்பில் அணியில் நட்பான சூழலைக் கடைபிடிக்க பின்பற்றும் சில விஷயங்களைப் பற்றிப் பேசினார் கேப்டன் ரோஹித் சர்மா.

Rohit Sharma

அவர் பேசியவை இங்கே, “போட்டிகளின் முடிவுகளின் அடிப்படையில் டிரெஸ்ஸிங் ரூமில் அணியின் சூழல் மாறிவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். அணிக்குள் சுமூகமான உறவைப் பேண ஒருவரோ இருவரோ மனது வைத்தால் போதாது. ஒட்டுமொத்த அணியுமே அதற்குத் தயாராக இருக்க வேண்டும். தரம்சாலாவில் நாங்கள் போட்டியில் ஆடுவதற்கு முன்பாக ஐந்தாறு நாள்கள் இடைவேளை இருந்தது. அதில் கிரிக்கெட்டைக் கடந்து அணியாகப் பல செயல்பாடுகளைச் செய்தோம்.

இரண்டு நாள்களை முழுமையாக தரம்சாலாவில் செலவளித்தோம். எங்களுக்கிடையே ஃபேஷன் ஷோ போட்டியெல்லாம் கூட நடத்தினோம். இது பெரிதாக யாருக்கும் வெளியே தெரியாது. அப்படியே இருப்பதும் நல்லதுதான்.

Team India

ஆஸ்திரேலியாவில் நடந்த கடந்த டி20 உலகக்கோப்பையிலிருந்துதான் இதையெல்லாம் செய்ய ஆரம்பித்தோம். உலகக்கோப்பை தொடங்குவதற்கு 10 – 15 நாள்களுக்கு முன்பாகவே ஆஸ்திரேலியாவிற்குச் சென்றுவிட்டோம். அங்கே பெர்த்தில் ஒரு 7 – 8 நாள்களுக்கு முகாமிட்டிருந்தோம். பெர்த் அருகே தனியாக ஒரு தீவு இருக்கும். அங்கே சென்றுவிட்டோம். கிரிக்கெட்டிலிருந்து நிறையவே விலகிச் சென்று ஒன்றாக நேரம் செலவளித்தோம். இலகுவான மனநிலைக்குச் செல்ல நிறைய குழு செயல்பாடுகளில் ஈடுபட்டோம்.

இப்படியான விஷயங்கள் இப்போது என்றில்லை. முன்பிருந்தே நடந்துகொண்டுதான் இருக்கின்றன என நினைக்கிறேன். களத்திற்குள் சென்றுவிட்டால் சிறப்பாகச் செயல்பட வேண்டும், அணியை வெல்ல வைக்க வேண்டும் என எக்கச்சக்கமான அழுத்தங்கள் இருக்கும். அதை மாற்றவே முடியாது. அதனால்தான் போட்டிக்கு முன்பாக அணியின் சூழல் இலகுவானதாக அழுத்தங்கள் அற்றதாக இருக்க வேண்டி இந்த பிரயத்தனங்களையெல்லாம் செய்கிறோம்.

Team India

வெற்றிக்கு என்னிடம் எந்த மந்திரமும் இல்லை. அணிக்கு என்ன தேவை ஒவ்வொரு வீரரும் அணிக்காக என்ன கதாபாத்திரத்தை ஏற்கப் போகிறார்கள் என்பதைப் பற்றிய தெளிவைக் கொடுத்துவிடுகிறோம்.

வீரர்கள் சில நேரங்களில் அணிக்குத் தேவையானதை செய்து கொடுக்கலாம். சில நேரங்களில் அவர்களால் எதிர்பார்த்தப்படி செயல்பட முடியாமல் போகலாம். எந்த ஒரு சூழலிலும் அந்த வீரருக்காக ஒரு கேப்டனாக துணை நிற்க வேண்டும். அவர்களுக்குத் தேவையான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிற்கும் கிரெடிட் கொடுத்தே ஆக வேண்டும். நாங்கள் இதே பாணியைத்தான் வருங்காலத்திலும் தொடரவிருக்கிறோம்” என்றார் ரோஹித் சர்மா.

Team India

ரோஹித்தின் கேப்டன்சி ஸ்டைலைப் பற்றிய உங்களின் கருத்துகளை கமென்ட் செய்யுங்கள்.



Source link